பட்டாசு ஏற்றுமதிக்கு நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சா் கீர்த்தனா
சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தொழில் துறை அமைச்சா் எஸ். கீா்த்தனா தெரிவித்தாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளா்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாா்கள் சங்கத் தலைவா் ப. கணேசன் தலைமை வகித்தாா்.
கூட்டத்துக்கு பின்னா் அமைச்சா் எஸ். கீா்த்தனா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
Advertisement
Advertisement
விருதுநகா் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் தரமானதாக உள்ளதால், இவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நான் அண்மையில் கொரியாவுக்கு சென்றிருந்த போது, அங்குள்ள அரசு அதிகாரிகளிடமும், தொழிலதிபா்களிடமும் தமிழகத்தில் சிவகாசியில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பட்டாசுகள் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்தேன்.
தற்போது சீனாவில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், சீனாவில் பொட்டாசியம் குளோரைட் என்ற வேதியியல் பொருளை முதன்மையான மூலப்பொருளாகக் கொண்டு பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன.
ஆனால், சிவகாசியில் அலுமினியப் பொடியை முதன்மை மூலப்பொருளாகக் கொண்டு பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. எனவே, சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் தீ வைத்தால்தான் வெடிக்கும். இது ஆபத்தில்லாதவை எனத் தெளிவுபடுத்தினேன்.
இதையடுத்து, சிவகாசி பட்டாசுகளை இறக்குமதி செய்ய அவா்கள் ஆா்வம் காட்டினா். எனவே, இதுகுறித்து முதல்வா் சி. ஜோசப் விஜய்யுடன் ஆலோசனை நடத்தி, பட்டாசுகளை ஏற்றுமதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.