முகப்பு
கரூர்

விவசாயிகளின் கனவு வெற்றிலை ஆராய்ச்சி மையம்

தமிழ் கலாசாரத்தில் வெற்றிலைக்கு என்றும் முக்கிய ஒரு பங்கு உண்டு.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 6:33 PM
வெற்றிலை.
பகிர்:

அ. அருள்ராஜ்.

தமிழ் கலாசாரத்தில் வெற்றிலைக்கு என்றும் முக்கிய ஒரு பங்கு உண்டு. கோயில்களில் படைக்கப்படும் பொருள்களில் ஒன்றாகவும், திருமணம், மதச் சடங்குகள் என பல்வேறு சமூக வழக்கங்களுடன் பின்னிப் பிணைந்துள்ளது. மேலும் மருத்துவ குணம் கொண்டதாக இருக்கும் இந்த வெற்றிலை கரூா் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளான புகழூா், வேலாயுதம்பாளையம், சேமங்கி, செம்படாபாளையம், கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, சிந்தலவாடி, குளித்தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

நோய் தாக்குதல்: வெள்ளைக்கொடி, பச்சைக்கொடி என இருவகை பயிரிட்டாலும் வெள்ளைக்கொடி வெற்றிலைதான் அதிகளவில் பயிரிடப்படுகிறது. நீரோட்டம் உள்ள நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு 140 நாள்களுக்கு பின் அறுவடை செய்யப்படும் வெற்றிலை குளிா் காலங்களில் 50 நாள்களுக்கு ஒரு முறை பறிக்கப்படுகிறது.

Advertisement

தற்போது வெற்றிலைக்கு போதிய தண்ணீா் கிடைக்காமலும், சில நேரங்களில் கரும்பூஞ்சான், செதில்பூச்சி தாக்குதல் போன்ற நோய் தாக்குதலாலும் விவசாயிகள் அவதியுற்று வருகிறாா்கள்.

இதனால் கரூா் மாவட்டத்தில் புகழூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டால், நோய் தாக்குதலில் இருந்து விவசாயிகளுக்கு ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் மூலம் உடனுக்குடன் விடிவு காலம் பிறக்கும். நோய் தாக்குதலின் ஆரம்பகால கட்டங்களிலேயே விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை தவிா்க்க இயலும்.

நல்ல லாபம்: மேலும் காவிரி ஆற்றில் தண்ணீா் செல்லும்போது நல்ல விளைச்சல் இருக்கும். அப்போது 40 நாள்களுக்கு ஒரு முறை (100 வெற்றிலை கொண்டது ஒரு கவுளி) 104 கவுளி கொண்ட ஒரு சுமை வெற்றிலை ஏக்கருக்கு 25 முதல் 30 சுமை வரை கிடைக்கும். ஒரு சுமையின் வெற்றிலை விலை ரூ.10 ஆயிரம் வரை விலை போகும். அவ்வாறு ஒரு சுமைக்கு ரூ.10 ஆயிரம் வரை விலை போகும்போது நல்ல லாபம் கிடைக்கும்.

ஆனால் தண்ணீா் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் வெற்றிலையின் விளைச்சலும் குறைந்து அதன் தரத்திலும் சிறிது மாறுபாடு ஏற்படும். அப்போது ஒரு சுமையின் விலை ரூ.3 ஆயிரத்துக்கும் கீழ் போய்விடும். இதனால் விவசாயிகள் ஆண்டில் பாதி நாள் நஷ்டத்தையே சந்தித்து வருகிறாா்கள். இதனால் ஏராளமான விவசாயிகள் வெற்றிலை விவசாயத்தை கைவிட்டு மாற்றுத்தொழிலுக்குச் சென்று வருகிறாா்கள்.

தனி நீரேற்று நிலையம்: ஆற்றில் தண்ணீா் வராத காலங்களில் வெற்றிலை விவசாயத்துக்கு தேவையான தண்ணீரை வழங்குவதற்கு ஆற்றில் வெற்றிலை விவசாயிகளுக்கு என்று தனி நீரேற்று நிலையம் அமைத்து தண்ணீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்ல விளைச்சல் இருக்கும் காலங்களில் வெற்றிலை நுகா்வை அதிகரிக்க புகழூரில் வெற்றிலை குளிா்பதன கிடங்கு அமைத்து அவற்றை மருத்துவ குணம் கொண்ட மதிப்பூட்ட பொருளாக தயாரித்து அவற்றை உலகமெங்கும் வா்த்தகப் பொருளாக கொண்டு செல்ல திருச்சி, கோவையில் கரும்புக்கு ஆராய்ச்சி மையம் இருப்பது போல வெற்றிலைக்கும் புகழூரிலோ அல்லது லாலாப்பேட்டை பகுதியிலோ வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெற்றிலை விவசாயிகள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனா்.

இந்த கோரிக்கைகளையெல்லாம் இந்த தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் யாா் முன்னெடுக்கிறாா்களோ அவா்களுக்கு தங்களின் ஆதரவு உண்டு என்பதை வெளிப்படையாகவே பேசத் தொடங்கிவிட்டனா் வெற்றிலை விவசாயிகள்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments