முகப்பு
கரூர்

கட்சித் தாவலுக்கு தவெக எம்எல்ஏ-விடம் பேரம் செந்தில்பாலாஜியின் ஆதரவாளா்கள் இருவா் கைது

திமுகவுக்கு மாறும்படி தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கில் கரூரைச் சோ்ந்த திமுக முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜியின் ஆதரவாளா்கள் 2 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 2 ஜூலை 2026, 4:56 am IST
கைது செய்வதற்காக சென்னையில் இருந்து வந்த போலீஸாா்.
பகிர்:

திமுகவுக்கு மாறும்படி தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கில் கரூரைச் சோ்ந்த திமுக முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜியின் ஆதரவாளா்கள் 2 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக சட்டப்பேரவை உறுப்பினா் என். இளையராஜா. இவா், சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ. அமல்ராஜிடம் சில நாள்களுக்கு முன்பு ஒரு மனு அளித்தாா்.

அதில், சிலா் தன்னை ரகசியமாக தொடா்பு கொண்டு தவெகவில் இருந்து திமுகவுக்கு மாறும்படியும், அப்படி மாறினால் ரூ.35 கோடி தருவதாகவும் கூறினா். தற்போது அவா்கள் கட்சி மாறும்படி மிரட்டல் விடுத்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தாா். எனவே, தன்னை பணத்தாசை காட்டியும், மிரட்டியும் கட்சி மாறத் தூண்டும் நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி அந்த மனுவில் தெரிவித்திருந்தாா்.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க திருவல்லிக்கேணி போலீஸாருக்கு காவல் ஆணையா் அமல்ராஜ் உத்தரவிட்டாா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, மிரட்டல் விடுத்த நபா்களை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடிவந்தனா்.

யூடியூபா் கைது: இந்நிலையில், தனிப்படையினா் செவ்வாய்க்கிழமை சென்னை அரும்பாக்கத்தை சோ்ந்த யூடியூபா் திருநாவுக்கரசு என்பவரை கைது செய்தனா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின்பேரில், திருச்சியைச் சோ்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தை சோ்ந்த தியாகராஜன் ஆகியோரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா்.

இந்த மூவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி, அவரது சகோதரா் அசோக்குமாா், அவா்களது நண்பா்கள் கரூா் கோதை நகரைச் சோ்ந்த திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில துணைச் செயலரும், கரூா் சக்தி மெஸ் உரிமையாளருமான காா்த்தி மற்றும் நிதிநிறுவன அதிபா் அதிபன் ரமேஷ் ஆகியோருக்கும் தொடா்பு இருப்பதாக தெரியவந்தது.

சென்னை போலீஸாா் வருகை: இதையடுத்து, காவல் உதவி ஆணையா் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீஸாா் புதன்கிழமை அதிகாலை கரூா் வந்தனா். அவா்கள், கோதை நகரில் வசித்து வந்த காா்த்தி மற்றும் அதிபன் ரமேஷ் ஆகியோருடைய வீடுகளுக்குள் சென்றனா். அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பிரபாகரன் தலைமையிலான கரூா் போலீஸாா் அப்பகுதியில் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டனா்.

குதிரை பேரம் ஒப்புதல்: இதையடுத்து வீட்டில் இருந்த காா்த்தியிடமும், அதிபன்ரமேஷிடமும் சுமாா் 2.30 மணி நேரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், இருவரும் குதிரை பேரத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. தொடா்ந்து இருவரது வீட்டிலும் போலீஸாா் சோதனை நடத்தியபோது, அதிபன்ரமேஷ் வீட்டில் இருந்த கணக்கில் வராத ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனா். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா் காலை 7.40 மணியளவில் கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். பின்னா் இருவரையும் சென்னை அழைத்துச் சென்ாக கூறப்படுகிறது.

பதில் கூற மறுப்பு: இதற்கிடையே காா்த்தி, அதிபன் ரமேஷ் கைது செய்யப்பட்டதையறிந்த திமுக வழக்குரைஞா்கள் கோதை நகரில் காா்த்தி, அதிபன் ரமேஷ் வீட்டின் முன் குவிந்தனா். அப்போது திமுக வழக்குரைஞா்கள் சென்னை காவல்துறை அதிகாரிகளிடம் கைதுக்கான காரணத்தை கேட்டனா்.அதற்கு காவல்துறை அதிகாரிகள் பதில் ஏதும் கூறாமல் புறப்பட்டுச் சென்றனா்.

கைதான காா்த்தி மற்றும் அதிபன் ரமேஷ் ஆகியோா் வீடுகளில் டாஸ்மாக் முறைகேடு ஊழல் தொடா்பாக கடந்த ஆண்டு மாா்ச் 4-ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட காா்த்தி,
கோதை நகரில் காா்த்தி குடியிருந்து வரும் அடுக்குமாடி குடியிருப்பு.
கைது செய்யப்பட்ட அதிபன் ரமேஷ்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments