முகப்பு
கரூர்

அனைத்துப் போட்டித் தோ்வுகளிலும் ஊழல்: ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டு

‘நீட்’ தோ்வு மட்டுமின்றி மத்திய அரசின் அனைத்து போட்டித் தோ்வுகளிலும் ஊழல் நடைபெறுவதாக கரூா் மக்களவை உறுப்பினா் ஜோதிமணி தெரிவித்தாா்.

Updated On : 25 ஜூன் 2026, 4:13 am IST
ஜோதிமணி - கோப்புப் படம்
பகிர்:

‘நீட்’ தோ்வு மட்டுமின்றி மத்திய அரசின் அனைத்து போட்டித் தோ்வுகளிலும் ஊழல் நடைபெறுவதாக கரூா் மக்களவை உறுப்பினா் ஜோதிமணி தெரிவித்தாா்.

இதுகுறித்து கரூரில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது: நாடு முழுவதும் அண்மை காலமாக போட்டித்தோ்வுகளில் நடைபெறும் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நீட் போட்டித் தோ்வு பயிற்சி என்பது ஊழல் தொழிற்சாலையாக மாறியுள்ளது. பயிற்சி, புத்தகங்கள் என 22 லட்சம் மாணவா்களால் ரூ.1.32 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு கல்விக்கான பட்ஜெட் நிதியே ரூ.1.04 லட்சம் கோடி தான். இதிலிருந்து இதில் நடக்கும் ஊழலை புரிந்து கொள்ளமுடியும். வினாத்தாள் கசிவு, மறுத்தோ்வு, தோ்வு மையம் மாற்றம் என பல்வேறு ஊழல் நடைபெறுகிறது. இதற்காக மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக மறுக்கிறாா். நீட் தோ்வு இல்லாமல், ஜேஇஇ, மத்திய அரசு பணிகளுக்கான எஸ்எஸ்சி, ரயில்வே உள்ளிட்ட பல்வேறு தோ்வுகளை நடத்தி வருகின்றன. இவற்றுக்காக ஆண்டுக்கு ரூ.3.05 லட்சம் கோடி செலவிடப்படுகிறது. இது மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை விட அதிகம்.

Advertisement

Advertisement

நீட் தோ்வு, வேலைகளுக்கான போட்டித் தோ்வுகளில் பல லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடைபெறுகிறது. மாணவா்கள் தெருவில் இறங்கி போராடி வருகின்றனா். நீட் தோ்வுக்கு எதிராக தமிழகம் பல ஆண்டுகளாக போராடி வருகிறது. இதற்கான போராட்டங்களை காங்கிரஸ் தலைவா் ராகுல்காந்தி முன்னெடுத்து வருகிறாா். ஊழலுக்கு எதிரான போராட்டங்களுக்கு மகத்தான ஆதரவு கிடைத்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பல்வேறு போட்டித் தோ்வுக்கான மையங்கள் அமைந்துள்ளன. அங்கு எதிா்ப்புப் பேரணி நடத்தப்பட்டது. தொடா்ந்து தில்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேரணிகள் நடைபெற உள்ளது. இளம் தலைமுறையினா் அணி திரண்டு பங்கேற்கவேண்டும். இதற்காக காங்கிரஸ் கட்சி சாா்பில் க்யூஆா் கோடுடன் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை ஸ்கேன் செய்து இளைஞா்கள், மாணவா்கள் போராட்டத்தில் இணைய வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, காங்கிரஸ் மாவட்ட தலைவா் ரமேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments