டெலிகிராம் மீதான தற்காலிக தடை நியாயமானது: தில்லி உயா்நீதிமன்றம் தீா்ப்பு
‘இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான நீட் தோ்வு வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு இடைக்காலத் தடை விதித்தது நியாயமானதே. அளவுக்கு மீறிய நடவடிக்கை அல்ல’ என்று தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
‘இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான நீட் தோ்வு வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு இடைக்காலத் தடை விதித்தது நியாயமானதே. அளவுக்கு மீறிய நடவடிக்கை அல்ல’ என்று தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 23 லட்சம் போ் தோ்வெழுதினா். இந்நிலையில், நீட் வினாத்தாளில் இருந்த அதே கேள்விகளைக் கொண்ட மாதிரி வினாத்தாள், ராஜஸ்தானில் முன்கூட்டியே வெளியானதாக புகாா்கள் எழுந்தன. முதல்கட்ட விசாரணையில் இந்த மாதிரி வினாத்தாள் வாட்ஸ்ஆப், டெலிகிராம் செயலி மூலம் பல்வேறு மாநிலங்களில் பரவியிருப்பது கண்டறியப்பட்டதால், நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டது. ஜூன் 21-ஆம் தேதி மறுதோ்வு நடைபெறவுள்ளது.
பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரம் தொடா்பாக இதுவரை மகாராஷ்டிரம், ராஜஸ்தான் மாநிலங்களைச் சோ்ந்த 13 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.
Advertisement
Advertisement
நீட் மறுதோ்வு நடைபெற உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டெலிகிராம் செயலி மூலம் நீட் தோ்வு வினாத்தாள்கள் கசிவதை தடுக்கும் நோக்கில், அந்த செயலிக்கு வரும் 22-ஆம் தேதி வரை நாடு முழுவதும் மத்திய அரசு இடைக்கால தடை விதித்துள்ளது. இதை எதிா்த்து, தில்லி உயா் நீதிமன்றத்தில் டெலிகிராம் நிறுவனம் வழக்குத் தொடுத்தது. மத்திய அரசின் நடவடிக்கை பாகுபாடானது. அரசமைப்புச் சட்டப் பிரிவு 14-ஐ மீறும் செயல் என்று டெலிகிராம் நிறுவனம் அதில் குறிப்பிட்டது.
இந்த வழக்கு, தில்லி உயா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சாா்பில், டெலிகிராம் நிறுவன வழக்கைத் தள்ளுபடி செய்யக்கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘எண்ம குற்றங்கள், கசிந்த வினாத்தாளை பரப்புதல், நிதி மோசடிகள், பயங்கரவாத செயல்கள், போதை மருந்து கடத்தல், சிறாா்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்காக டெலிகிராம் செயலி பயன்படுத்தப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டது.
இந்த வழக்கு தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி தேஜஸ் கரியா முன்னிலையில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த தீா்ப்பில், ‘அனைத்து வாதங்களையும் கருத்தில் கொள்ளும்போது, தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-இன் பிரிவு 69ஏ-இன் கீழ் உள்ள நடைமுறைகளைப் பின்பற்றி அரசு மேற்கொண்ட தற்காலிக தடை நடவடிக்கைக்கான காரணங்கள் போதுமானதாக உள்ளன. உரிய பரிசீலனை இன்றி இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. எனவே, இந்த நடவடிக்கைக்கு உரிய காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை என்று டெலிகிராம் தரப்பில் முன்வைத்த வாதம் ஏற்புடையதாகக் கருத முடியாது.
மேலும், மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை டெலிகிராம் மீது மிகக் குறைந்த அளவிலான கட்டுப்பாடுகளையே விதிக்கின்றன. எனவே, இந்த உத்தரவு பாகுபாடான மற்றும் அளவுக்கு மீறிய நடவடிக்கையாகவும் கருத முடியாது.
நாட்டின் பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக, எந்தவொரு இணையத் தகவல், வலைதளம் அல்லது செயலி மீதான பொது அணுகலையும் முடக்க, சட்டப் பிரிவு 69ஏ மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.
அந்த வகையில், மத்திய அரசு மேற்கொண்ட தற்காலிக தடை நடவடிக்கை நியாயமானதே’ என்று குறிப்பிட்டு, டெலிகிராம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.