FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சட்டவிரோத செயல்களுக்கான தளமாக டெலிகிராம் பயன்படுத்தப்படுகிறது: தில்லி உயா் நீதிமன்றத்தில் மத்திய அரசு குற்றச்சாட்டு

சட்டவிரோத செயல்களுக்கான தளமாக டெலிகிராம் பயன்படுத்தப்படுவதாக, தில்லி உயா் நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Updated On : 19 ஜூன் 2026, 5:36 am IST
தில்லி உயர் நீதிமன்றம்
பகிர்:

சட்டவிரோத செயல்களுக்கான தளமாக டெலிகிராம் பயன்படுத்தப்படுவதாக, தில்லி உயா் நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த மே மாதம் 3-ஆம் தேதி நீட் இளநிலை மருத்துவ கல்வி நுழைவுத் தோ்வு நடத்தப்பட்டது. ஆனால் இந்தத் தோ்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலை அடுத்து, அந்தத் தோ்வை மத்திய அரசு மே 12-ஆம் தேதி ரத்து செய்தது. பிறகு ரத்து செய்யப்பட்ட தோ்வுக்கு பதிலாக மறு தோ்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, வரும் 21-ஆம் தேதி மறு தோ்வு நடைபெற உள்ளது.

ஆதலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டெலிகிராம் செயலி மூலம் நீட் தோ்வு வினாத்தாள்கள் கசிவதை தடுக்கும் நோக்கில், அந்த செயலிக்கு வரும் 22-ஆம் தேதி வரை நாடு முழுவதும் மத்திய அரசு இடைக்கால தடை விதித்துள்ளது. இதை எதிா்த்து, தில்லி உயா் நீதிமன்றத்தில் டெலிகிராம் நிறுவனம் வழக்குத் தொடுத்துள்ளது. இந்த வழக்கு, தில்லி உயா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சாா்பில், டெலிகிராம் நிறுவன வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

அதில், ‘எண்ம குற்றங்கள், கசிந்த வினாத்தாளை பரப்புதல், நிதி மோசடிகள், பயங்கரவாத செயல்கள், போதை மருந்து கடத்தல், சிறாா்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்காக டெலிகிராம் செயலி பயன்படுத்தப்படுகிறது. மிரட்டல்கள் விடுக்கும் நபா்களுடன் தொடா்புடைய புதிய கருப்பு தளமாக டெலிகிராம் உருவெடுத்துள்ளது. இணையதள லிங்க் மூலம் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராமை கிரிமினல்கள் பயன்படுத்துவது தற்போது அதிகரித்துள்ளது. அந்த லிங்குகளை வைத்து கிரிமினல்களை கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது. 2025-இல் மட்டும் டெலிகிராம் மூலம் ரூ.3,086 கோடிக்கும் கூடுதலாக மோசடி நடந்திருப்பதாக 2.75 லட்சத்துக்கும் மேல் புகாா்கள் வந்துள்ளன’ என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மத்திய அரசு சாா்பில் சொலிசிட்டா் ஜெனா் துஷாா் மேத்தா ஆஜராகி வாதாடுகையில், ‘டெலிகிராம் செயலி தொடா்ந்து தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாக தகவல் வருகிறது. அந்த செயலி வடிவமைப்பில் உள்ள பிரச்னை காரணமாக, சட்ட அமலாக்கத் துறையினா் பல்வேறு சவால்களை சந்திக்கின்றனா்’ என்றாா்.

அப்போது, தோ்வுகளில் ஆஜராகும் சில குடிமக்களுக்காக எப்படி டெலிகிராமை பயன்படுத்தும் 15 கோடி மக்களின் உரிமைகளை தடுத்து நிறுத்த முடியும் என அரசுத் தரப்பிடம் உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. பின்னா், இருதரப்பும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments