முகப்பு
பெரம்பலூர்

தீபாவளி: பெரம்பலூர், அரியலூர் கடைவீதிகளில் மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொருள்கள் வாங்க பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை கடைவீதி

Updated On : 5 நவம்பர் 2018, 8:49 am IST
பகிர்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொருள்கள் வாங்க பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கடுமையான வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளியை முன்னிட்டு கடந்த சில நாள்களாகவே பெரம்பலூர் நகரில் கடைவீதி, தலைமை அஞ்சலகத்தெரு, பழைய பேருந்து நிலைய வளாகம், தேரடி வீதி, கனரா வங்கி சாலை, என்.எஸ்.பி சாலை உள்ளிட்ட நகரின் பிரதான இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. பெரம்பலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கானோர் மேற்கண்ட இடங்களில் மக்கள் பொருள்களை வாங்க காலை முதல் இரவு வரை கூடுகின்றனர். 
கடைவீதி, தலைமை அஞ்சலகத் தெரு முழுவதும் இருபுறங்களிலும் மலிவு விலை துணிகள், வீட்டு உபயோகப் பொருள்கள் விற்கும் தெருவோரக் கடைகள் அதிகளவில் உள்ளன. இங்கு கடைகள் நடைபாதை மேடைகளில் உள்ளதால், மக்கள் சாலையிலே நடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பள்ளிவாசல் தெரு, என்.எஸ்.பி. சாலை தினசரி மார்க்கெட் சாலை பகுதிகளிலுள்ள பலசரக்கு கடைகளிலும் தீபாவளி பண்டிகைக்குத் தேவையான பலசரக்கு பொருள்கள் வாங்குவதற்கு நகர மக்கள் மட்டுமன்றி, சுற்றுப்புற கிராம மக்களும் குவிந்தனர். கடைவீதிகளுக்கு வருவோர் தங்களது வாகனங்களை நிறுத்த உரிய இடங்களை காவல்துறையினர் ஏற்படுத்தவில்லை. இதனால், பொருள்கள் வாங்க வந்திருந்த பொதுமக்கள் அந்தந்தப் பகுதியின் சாலையோரங்களில் தங்கள் வாகனங்களை நிறுத்தியதால் நகரப் பேருந்துகள், மோட்டார் சைக்கிள்கள் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டது. 
தீபாவளி பண்டிகை காலத்தில் பொதுவாக வடகிழக்கு பருவமழை தொடங்குவது வழக்கம். கடந்த 2 நாள்களாக பரவலான சாரல் மழை பெய்ததால் வியாபாரிகள் அச்சமடைந்தனர். எனினும், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மழை இல்லாத சூழல் தெருவோர வியாபாரிகளுக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். உழவர் சந்தை, தினசரி காய்கறி சந்தையிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. நிகழாண்டு தீபாவளி விற்பனை நன்முறையில் நடைபெறுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 
பாதுகாப்பு பணிகளில் சுணக்கம்:  
வழக்கம்போல, பெரம்பலூர் நகரில் பாதுகாப்பு பணிகளில் சுணக்கம் காணப்பட்டது. பழைய பேருந்து நிலையம், புறநகர் பேருந்து நிலையம், காமராஜர் வளைவு, எளம்பலூர் சாலை கடைவீதி உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால், பாதுகாப்புப் பணிகளில் ஒரு போலீஸார் கூட ஈடுபடவில்லை. அதேபோல, போக்குவரத்துப் போலீஸாரும் இல்லாததால், ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களும், சுமை ஆட்டோ ஓட்டுநர்களும் தங்களது விருப்பத்திற்கேற்ப வாகனங்களை நிறுத்தி பயணிகளையும், சரக்குகளையும் ஏற்றி, இறக்கி விடுகின்றனர். இதனால், நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் காணப்பட்டது.  
அரியலூர் : அரியலூர் கடைவீதிகளில் ஞாயிற்றுக்கிழமை மக்களின் கூட்டம் அலைமோதியது. புத்தாடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள், தங்க நகைகள், இனிப்புகள், பட்டாசுகள் விற்பனை களைகட்டியுள்ளது. மக்களைக் கவரும் வகையில் வணிக வளாகங்கள், முன்னனி நிறுவனங்கள் பல்வேறு தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளன. இதனால் அரியலூர் நகரில் பிரதான கடைவீதி, சின்ன கடைவீதி, மார்க்கெட் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 2 நாட்களாக மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. இப்பகுதிகளில் தற்காலிகக் கடைகளும் அதிகரித்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் காலையிலேயே மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 
       பிரபல கடைகள் முதல் சாலையோரக் கடைகள் வரை அனைத்திலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நெரிசலைப் போக்குவரத்து போலீஸார் ஒழுங்குபடுத்தினர். திருடர்களைக் கண்காணிக்க 50-க்கும் மேற்பட்ட போலீஸார் சாதாரண உடையில் மக்களோடு மக்களாக சென்றனர் . அதிக நகை அணிந்து சென்ற பெண்களிடம், நகைகளை கவனமாகப் பார்த்துக்கொள்ளும்படி அறிவுரை வழங்கினர். பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன. மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரியலூரில் பணிபுரிபவர்கள் தங்களது சொந்த ஊருக்குப் புறப்பட்டனர். இதனால் அரியலூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.  
திருச்சி, தஞ்சை, விருத்தாசலம், பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளிலும் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல் அரியலூர் ரயில் நிலையத்திலும் வழக்கத்தை விட ஞாயிற்றுக்கிழமை மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments