பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா? - நிலையாமைக் கொண்டாடிய கவிஞர் கண்ணதாசன்!
கவிஞர் கண்ணதாசனின் நூற்றாண்டு தொடங்குவதையொட்டி 'வாழ்க்கை நிலையாமை' தொடர்பான அவரது பாடல்கள் பற்றி...
பேரன்பையும் பெருங்கோபத்தையும் வெளிக்காட்டிக் கொள்ள தற்காலத்தில் குட்டி குட்டி எமோஜிகள் போதுமானதாக இருக்கிறது. அறுபதுகளில் தொடங்கி எழுபதுகளின் பிற்பகுதி வரையிலான பெரும்பகுதி மனிதர்களின் ஆசை, கோபம், காதல், மோகம், சோகம், கண்ணீர், பக்தி, இன்பம், துன்பமென அனைத்து உணர்வுப்பூர்வமான வெளிப்பாடுகளிலும் கண்ணதாசன் அவரது பாடல்கள் மூலமாக கலந்திருக்கிறார்.
துஷ்டி, துக்கம், எழவு, சாவு என எப்படி விளித்தாலும் மரணம் வருத்தத்துக்குரியதே. பாவத்தின் சம்பளம் மரணம் என்கிறது திருவிவிலியம். ஆனால், 18 வயதில் எழுதத் தொடங்கி 54 வயதில் மரித்துப்போன கவியரசர் கண்ணதாசன் , "வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது" என்று மரணத்தை இயல்பான ஒன்றாக்கி நம்மை ஆமோதிக்கச் செய்கிறார்.
திரைப்படங்களில் இன்றளவும் மரணம் குறித்த பாடல்கள் வருகின்றன.
Advertisement
Advertisement
ஆனால், அவை குறிப்பிட்ட அந்தப் படத்தில் வரும் காட்சிகளுக்குப் பொருந்திப் போகிறதே தவிர, மக்களின் வாழ்வியலோடு ஒத்துப்போவதில்லை. தவிர்க்கவியலா மரணத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அவை பலருக்கு கொடுப்பதில்லை. ஆனால், "உறவைச் சொல்லி அழுவதனாலே... உயிரை மீண்டும் தருவானா" எனக் கேட்கும் கவியரசர் அத்தகைய பக்குவத்தை, இதுபோன்ற பல பாடல்களின் மூலம் நமக்கு கற்பிக்கிறார்.
அவருடைய காதல், தத்துவம், சோகப் பாடல்கள் பேசப்பட்ட அளவுக்கு நிலையாமை, மரணம் குறித்தப் பாடல்கள் அதிகம் பேசப்படுவதில்லை.
இன்றளவும் 'கவிஞர்' என்றவுடன் நினைவுக்கு வரும் ஒற்றைப் பெயர் கண்ணதாசன்தான். எளிய மக்களைச் சென்றடைதலே இலக்கியத்தின் ஆகச்சிறந்த வெற்றி என்பதை நன்குணர்ந்த கவிஞர், கருப்பு - வெள்ளைக் காலத்து தமிழ் திரையிசைப் பாடல்கள் மூலம் மக்களுக்கு இலக்கியப் பாடம் புகட்டியவர் அவர். குறிப்பாக மரணத்தை மையமாக வைத்து 'பாலும் பழமும்', 'பாதக்காணிக்கை', ஆகிய திரைப்படங்களில் வந்த மரணம் குறித்தப் பாடல்கள் மிக நுட்பமானவை.
ஒருவருடைய மரணம் அவர் சார்ந்த பலருக்கும் அதிர்ச்சி தரக்கூடியது. அழவைப்பது, ஆறுதல்படுத்த முடியாதது. கவிஞர் கண்ணதாசன், இந்த உணர்வு நிலைகளை மிக சாதுர்யமாக கையாள்கிறார். மரணம் தொடர்பான ஒரு பாடலை, "போனால் போகட்டும் போடா... இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா" என்று தொடங்குகிறார். இறந்தவர்களை சிறுமைப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்ட வரிகள் அல்ல அது. மரணித்துப் போனவரின் உடனிருப்பவர்களை ஆரத்தழுவி ஆற்றுப்படுத்தும் கவிஞரின் கரங்கள் அவை.
அதே பாடலில், "வாழ்க்கை என்பது வியாபாரம்... வரும் ஜனனம் என்பது வரவாகும் ... அதில் மரணம் என்பது செலவாகும்" என்ற வரிகளின் மூலம் வியாபாரமான வாழ்க்கையில், பிறப்பு - இறப்பை, வரவு - செலவாக்கி மரணத்தின் மீதான துக்கத்தை தூக்கி எறியச் செய்திருப்பார் கவிஞர். பாதிக்கப்பட்டவர்களை இவ்வாறாக தேற்றும் கவிஞர் அத்தோடு நில்லாமல் , "நமக்கும் மேலே ஒருவனடா... அவன் நாலும் தெரிஞ்ச தலைவனடா... தினம் நாடகமாடும் கலைஞனடா" , என்று இந்த பெருஞ்சோகத்துக்கு காரணமான கடவுளை போகிறப்போக்கில் சாடி சென்றிருப்பார்.
இதுவொரு வகையான மனிதர்களின் மரணத்துக்கான பாடல் என்றால், மற்றொரு வகை மனிதர்களுக்கானப் பாடலை "ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வம் என்ன திரண்டதோர் சுற்றம் என்ன? கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?" என்ற தொகையறாவுடன் ஆரம்பித்திருப்பார்.
வாழும்போது ஆணவத்தில் ஆடுபவர்களும், கோடி கோடியாக செல்வம் சேர்த்தவர்களும் நிச்சயம் ஒருநாள் மாண்டு போவதை பேசும் கவிஞர், இறந்தபிறகு யாராக இருந்தாலு எதையும் கொண்டு செல்ல முடியாது என்பதை கூறியிருப்பார்.
கடவுளின் படைப்புகளாக தங்களைக் கூறிக்கொள்ளும் மக்கள் யாரும் பழி பாவங்களுக்கு ஒருபோதும் அஞ்சுவதில்லை. அதேநேரம் நீண்டநாள் இந்த உலகில் வாழப்போவதாக நினைத்துக் கொள்ளும் மனிதனுக்கு, "வீடு வரை உறவு... வீதி வரை மனைவி...
காடு வரை பிள்ளை... கடைசி வரை யாரோ?" என்ற வரிகளின் மூலம் ஒருவர் இறப்புக்குப் பின் நிகழும் யதார்தத்தை பொட்டில் அடித்து புரியவைத்திருப்பார் கவிஞர்.
இந்தப் பாட்டில் வரும் ஒரு சரணத்தை,
"தொட்டிலுக்கு அன்னை... கட்டிலுக்குக் கன்னி... பட்டினிக்குத் தீனி... கெட்ட பின்பு ஞானி.." என கவிஞர் முடித்திருப்பார். இசையமைப்பாளர்கள் கொடுக்கும் சந்தத்துக்குள் ஒரு பெரும் சேதியை, வாழ்வியல் தத்துவத்தை, இலக்கியத்தை சாமானிய மனிதர்களுக்கு கடத்தியவர் கவியரசர்.
கவியரசர் கண்ணதாசனின் "மயக்கமா கலக்கமா" என்ற பாடல் வரிகள்தான் திரைத்துறையை விட்டுவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பவிருந்த காவியக் கவிஞர் வாலியை தடுத்து மீண்டும் திரைத்துறைக்கு கொண்டு வந்தது. கண்ணதாசனின் "மாலைப் பொழுதின் மயக்கத்திலே" என்ற பாடலின் வரிகள்தான் இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கைப் பயணத்தை திசைமாற்றியது. இப்படி கவிஞரின் பல பாடல்கள் சாமானியர்கள் தொடங்கி சாதித்துக் காட்டியவர்களின் வாழ்க்கைக்கும் பாடமாகி இருக்கிறது. நிலையாமை குறித்து முற்றும் உணர்ந்த கண்ணதாசனின் மரணம் குறித்த பாடல்கள் சாகாவரம் பெற்றவை.
மனித வாழ்வில் தவிர்க்க முடியாத மரணத்தை கடந்துச் செல்ல கற்பித்தவர்களில் கவிஞரைப் போல ஒருவர் பிறக்கவே முடியாது என்பதே நிதர்சனம்.
கவியரசர் கண்ணதாசனின் இரங்கல் கூட்டத்தில், "எழுதப் படிக்கத் தெரியாத எத்தனையோ பேரில் எமனும் ஒருவன்.
அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான்" என இரங்கல் பாடியதாக கவிஞர் வாலி ஒரு பேட்டியில் கூறியதுதான், கண்ணதாசனின் தனித்துவமான கவித்துவம்தான் இந்த நூற்றாண்டு பிறந்தநாளிலும் நினைத்துக்கொண்டே இருக்கச் செய்கிறது....
(ஜூன் 24 - கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாள், நூற்றாண்டு தொடக்கம்)
Poet Kannadasan who celebrated the nature of death through his songs
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.