பெரம்பலூரில் பரவும் மர்மக் காய்ச்சல்: இடப்பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி
பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனையில் போதிய இடவசதியின்றி நோயாளிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
தமிழகத்தில் சில மாவட்டங்களில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் சிலர் உயிரிழந்திருக்கின்றனர். பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மர்மக் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் நகர், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர், லப்பைக்குடிகாடு, குரும்பலூர், பாடாலூர், சிறுவாச்சூர், செட்டிக்குளம் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் சுமார் 200 -க்கும் அதிகமான மக்கள் காய்ச்சலால் பாதிப்புக்குள்ளாகி வெளி மற்றும் உள் நோயாளிகளாக மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று மருந்துகள் வாங்கிச் செல்கின்றனர். இதேபோல, தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இடவசதி பற்றாக்குறை:
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை என்றபோதிலும், போதிய இடவசதியின்றி நோயாளிகளும், தாய்மார்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இங்கு, காய்ச்சலால் பாதிப்புக்குள்ளளாகி சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்காததால், தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்லும் நிலை தொடர்கிறது. போதிய படுக்கை வசதி இல்லாததால் ஒரு படுக்கையில் 2 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலானோரைத் தரையில் படுக்கவைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், மர்மக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான எவ்வித நடவடிக்கையிலும் மாவட்ட நிர்வாகம் ஈடுபடவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் சிலர் கூறியது: பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான மக்களிடம் காணப்படுவது வழக்கமாக அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரை தோன்றக்கூடிய வைரஸ் காய்ச்சல்தான். இது மழைக்காலத்தில் வரக்கூடிய ஒரு சாதாரண காய்ச்சல். இது ஓரிரு நாள்களில் குணமாகிவிடும். இதுகுறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. அதே சமயம் 3 நாள்களுக்கு மேல் கடும் காய்ச்சல் இருந்தால் அரசு மருத்துவமனைகளை அணுகி சிகிச்சையைத் தொடரலாம். போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது. மருத்துவமனைக்கான விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்தவுடன் இப்பிரச்னனைகள் இருக்காது என்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.