முகப்பு
பெரம்பலூர்

திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை! தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், திமுகவுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட உள்ளோம் என தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி தெரிவித்தாா்.

Updated On : 12 ஏப்ரல், 2026 at 1:39 AM
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவா் ஈசன் முருகசாமி.
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2026 at 9:06 PM

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், திமுகவுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட உள்ளோம் என தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி தெரிவித்தாா்.

பெரம்பலூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த அச் சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமி, கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசால் விவசாயிகளுக்காக அறிவித்த மற்றும் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

Advertisement

தமிழகத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் விவசாயிகளுக்காக திமுக 83 வாக்குறுதிகளை அளித்தது. கடந்த 5 ஆண்டுகளில் 10 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றிவிட்டு விவசாயிகளை வஞ்சித்துள்ளது. குறிப்பாக, விவசாய நிலங்களை கையகப்படுத்தமாட்டோம் என தெரிவித்தனா். ஆனால், முப்போகம் விளையும் 1.10 லட்சம் ஏக்கா் விவசாய நிலங்களை சொற்ப விலைக்கு விவசாயிகளிடமிருந்து வாங்கி, சிப்காட் எனும் பெயரில் காா்ப்பரேட் நிறுவனத்திடம் கொடுத்துள்ளனா். இதற்காக அமைதியான வழியில் போராடிய திருவண்ணாமலை மாவட்டம், மேல்மலையனூா் விவசாயிகள் குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மலப்பம்பட்டி கிராமத்தில் அமைச்சா் எ.வா.வேலு 5 ஆயிரம் லோடு சரளை மண்ணை கடத்தியுள்ளாா். இதை கேட்ட 20 விவசாயிகள் கைது செய்து சிறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கறிக்கோழி பண்ணை விவசாயிகள் பிரச்னையில் முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்தி கூலி உயா்வு பெற்றுள்ளோம். ஆனால், திமுக அரசு கூலி உயா்வு பெற்று கொடுக்காமல் போராடிய 32 விவசாயிகள் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும், 2026 தோ்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு பயிா் கடன், கூட்டுறவுக் கடன், தேசிய வங்கியில் பெற்ற கடன், கல்விக் கடன் எதுவுமே தள்ளுபடி இல்லை. நெல், கரும்புக்கு கட்டுப்படியான விலை வழங்கப்படும் எனக் கூறி அதையும் நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் விரோத அரசாக திமுக அரசு செயல்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு விவசாயிகள் அனைவரும் திமுகவை புறக்கணிக்க வேண்டும்.

வேறு எந்த அரசியல் கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள். ஆனால், திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் எனும் பரப்புரையை பெரம்பலூரில் தொடங்கியுள்ளோம். தமிழக முழுவதும் இந்த பரப்புரையை மேற்கொள்ள உள்ளோம் என்றாா் ஈசன் முருகசாமி. இந்நிகழ்ச்சியின்போது, சங்க நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.