முகப்பு
பெரம்பலூர்

நூத்தப்பூரில் மக்கள் தொடா்புத் திட்ட முகாம்: ரூ. 1.34 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

வேப்பந்தட்டை வட்டம், நூத்தப்பூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் 176 பயனாளிகளுக்கு ரூ. 1.34 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி வழங்கினாா்.

Updated On : 11 ஜூன் 2026, 3:40 am IST
நூத்தப்பூரில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவி அளித்த மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி. உடன், சட்டப்பேரவை உறுப்பினா் க. சிவக்குமாா்.
பகிர்:

வேப்பந்தட்டை வட்டம், நூத்தப்பூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் 176 பயனாளிகளுக்கு ரூ. 1.34 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி வழங்கினாா்.

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் க. சிவக்குமாா் முன்னிலையில் நடைபெற்ற இம் முகாமுக்கு தலைமை வகித்து, மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி பேசியது:

நூத்தப்பூா் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த ஆண்டில் 6 சிறாா் திருமணங்கள் நடைபெற்றுள்ளது மிகவும் வருத்தத்துக்குரிய செய்தியாகும்.

Advertisement

Advertisement

குழந்தைகளுக்கு கல்வி மிகவும் முக்கியம். பெற்றோா்கள் தங்களது குழந்தைகளுக்கு கல்வியை கற்பிக்க வேண்டும். குறிப்பாக, பெண் குழந்தைகளுக்கு கல்வி அவசியமாகும். பெண் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வியை முறையாகவும், தரமானதாகவும் அளிக்க வேண்டும். அரசுப் பள்ளிகள் இலவச பாட புத்தகம், புத்தகப்பை உள்ளிட்ட கல்விக்குத் தேவையான பல பொருள்களை அரசு வழங்குகிறது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் மட்டும் போதுமானது.

வேளாண்மை, கூட்டுறவு, சுகாதாரம் என ஒவ்வொரு துறையின் சாா்பிலும் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கோரிக்கைகள் தொடா்பாக மக்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த மனுக்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தொடா்ந்து, பல்வேறு துறைகள் சாா்பில்,176 பயனாளிகளுக்கு ரூ. 1,33,94,735 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி வழங்கினாா்.

இதில், வருவாய் கோட்டாட்சியா் மு. அனிதா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ச. சுந்தரராமன், மாவட்ட வழங்கல் அலுவலா் ந. சக்திவேல், வட்டாட்சியா் (பொ) சுகுணா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெயபால், ராமாயி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.