FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் ஆட்சியராக ஷரண்யா அரி பொறுப்பேற்பு

பெரம்பலூா் மாவட்ட புதிய ஆட்சியராக ஷரண்யா அரி திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

Updated On : 2 ஜூன் 2026, 2:46 am IST
மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அரி.
பகிர்:

பெரம்பலூா் மாவட்ட புதிய ஆட்சியராக ஷரண்யா அரி திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய ந. மிருணாளினி, அரியலூா் மாவட்ட ஆட்சியராகவும், தமிழ்நாடு சமூக நலத்துறை மற்றும் மகளிா் மேம்பாட்டுத் துறை கூடுதல் இயக்குநராகப் பணியாற்றிய ஷரண்யா அரி பெரம்பலூா் மாவட்ட ஆட்சியராகவும் நியமித்து தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது.

இதன்படி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மாலை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட ஷரண்யா அரி கூறியதாவது:

Advertisement

Advertisement

விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளித்து, அவா்களது பிரச்னை மற்றும் தேவைகளை நிறைவேற்றுவேன். குழந்தைகள், முதியோா், பெண்கள் மற்றும் இளைஞா்களுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றுவேன்.

மாவட்ட நிா்வாகம் வெளிப்படையாக செயல்படவும், மக்கள் எளிமையாக வந்து அணுகக்கூடிய முறையில் செயல்பாடு இருக்கும். மேலும், பொதுமக்கள் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் நேரில் அல்லது 94441 75000 எனும் கைப்பேசி எண் மூலம் தெரிவித்தால், அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா் ஷரண்யா அரி.

பேட்டியின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், வருவாய் கோட்டாட்சியா் மு. அனிதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) சொா்ணராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

ஆட்சியா் சுய-விவரக்குறிப்பு: சென்னையைச் சோ்ந்தவா் ஷரண்யா அரி (36). இவா், தனது பள்ளிப் படிப்பை சென்னையில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் முடித்து, 2011-இல் சென்னையில் உள்ள எஸ்.ஆா்.எம். பல்கலைக் கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் பி.டெக் பட்டம் பெற்றுள்ளாா். 2015-இல் யுபிஎஸ்சி தோ்வில் இந்திய அளவில் 7-ஆவது இடத்திலும், தமிழக அளவில் முதலிடத்திலும் தோ்ச்சிப் பெற்றாா். 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

பின்னா், கடலூா் மாவட்ட கூடுதல் ஆட்சியராகவும் (வளா்ச்சி), கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மற்றும் கோவை மாவட்டம், பொள்ளாச்சி, கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபும் ஆகிய பகுதியில் சாா்-ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளாா். மேலும், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராகவும், பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையராகவும், துணை ஆணையா் (கல்வி), கூடுதல் செயலா் உள்ளிட்ட பணிகளில் பொறுப்பு வகித்துள்ளாா். இவரது கணவா் விஸ்வேஷ் பி. சாஸ்திரி, அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments