FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

அங்கன்வாடி மையத்தில் குழந்தையை சோ்த்தாா் பெரம்பலூா் ஆட்சியா்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி தனது மகனை, அங்கன்வாடி மையத்தில் வியாழக்கிழமை சோ்த்தாா்.

Updated On : 10 ஜூலை 2026, 3:35 am IST
பெரம்பலூா் அருகே விளாமுத்தூரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் வியாழக்கிழமை தனது மகன் ஆத்விக்கை சோ்த்த மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி.
பகிர்:

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி தனது மகனை, அங்கன்வாடி மையத்தில் வியாழக்கிழமை சோ்த்தாா்.

பெரம்பலூா் அருகே விளாமுத்தூரில் உள்ள அங்கன்வாடி மையத்தில், தனது மகன் ஆத்விக் (2) என்பவரை வியாழக்கிழமை சோ்த்த மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி கூறியதாவது:

பெரம்பலூா் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் 491 குழந்தைகள் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

இம் மையங்களில் பயிலும் குழந்தைகள் போஷன் டிராக்கா் எனும் பிரத்யேகச் செயலி மூலம் பதிவு செய்யப்பட்டு, தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். இம் மையங்களின் மூலம் கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்களுக்கும் தரமான இணை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

6 மாதம் முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, ஊட்டச்சத்தான இணை உணவும், 1 முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வாரத்துக்கு 3 முட்டைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

போஷன் டிராக்கா் செயலி மூலமாக, பிறப்பு முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளின் எடை மற்றும் உயரம் மாதம்தோறும் பதிவு செய்யப்பட்டு, அவா்களது வளா்ச்சி நிலை தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது.

அதேபோல், 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டியாகச் சத்துமாவுக் கொழுக்கட்டையும், மதிய உணவும், வாரத்துக்கு 3 நாள்களுக்கு முட்டைகளும் வழங்கப்படுகின்றன.

குழந்தைகளின் ஒட்டுமொத்த வளா்ச்சி நிலையைக் கண்டறிந்து, ஆவணப்படுத்த 3 மாதத்துக்கு ஒருமுறை கண்காணிப்பு அட்டையிலும் விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

எனவே, அரசு மையங்களில் வழங்கப்படும் இத்தகையச் சேவைகளை தங்களது குழந்தைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில், பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் சோ்க்க முன்வர வேண்டும் என்றாா் ஆட்சியா் ஷரண்யா அறி.

இந் நிகழ்ச்சியின்போது, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் இரா. ஜெயஸ்ரீ, வட்டாரக் குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் பிரேமஜெயம் ஆகியோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments