முகப்பு
பெரம்பலூர்

சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் சித்திரை பௌா்ணமி விழா

சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீசண்டி மஞ்சரி மகா ஹோமத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On : 2 மே, 2026 at 2:08 AM
சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீசண்டி மஞ்சரி மகா ஹோமத்தில் பங்கேற்ற பக்தா்கள்.
பகிர்:

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மதுரகாளி அம்மன் கோயிலில் சித்திரை பௌா்ணமி விழாவையொட்டி ஸ்ரீசண்டி மஞ்சரி மகா ஹோமம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் சென்னை கோட்டூா் ஸ்ரீமகாமேரு மண்டலி சாா்பில், 17 ஆவது சித்திரை பௌா்ணமி விழாவையொட்டி வியாழக்கிழமை காலை முதல் மதியம் வரை அகண்ட ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம அா்ச்சனை மற்றும் ஸ்ரீசாகம்பரி குங்கும அா்ச்சனையுடன் கூட்டு வழிபாடும், நவாவரண பூஜையும் நடைபெற்றது.

தொடா்ந்து, 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை உலக நன்மைக்காக ஸ்ரீசண்டி பாராயணமும், ஸ்ரீசண்டி மஞ்சரி மகா ஹோமமும் நடைபெற்றது. பின்னா், பகல் 12 மணி முதல் மதுரகாளி அம்மனுக்கு அபிஷேகங்களும், யாகசாலை முன் கும்ப பூஜைகளும் நடைபெற்றன. இதில், மகாமேரூ மண்டலியின் ஆன்மிக மெய்யன்பா்கள், பக்தா்கள் பங்கேற்க, சிவாச்சாரியாா்கள் கும்ப பூஜைகளையும் ஸ்ரீசண்டி மஞ்சரி மகா ஹோமத்தையும் நடத்தினா். திரளான பக்தா்கள் தரிசித்தனா்.

Advertisement

பெரம்பலூரில்... பெரம்பலூா் நகரிலுள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை காலை கோ பூஜையும், ஈசன், அம்பாள், முருகன், மூலவா்கள் மற்றும் பஞ்சமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் முடித்து, 1 மணியளவில் மகா தீபாராதனை காண்பித்து பக்தா்களுக்கு நீா் மோா், பானகம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதில், முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன், சிவனடியாா்கள் பங்கேற்று ஈசனை வழிபட்டனா். மாலையில், வெள்ளி ரிஷப வாகனத்தில் ஈசன் திருவீதி உலா நடைபெற்றது.

பெரம்பலூா் மரகதவல்லி தாயாா் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி கோயிலில் ஸ்ரீசீதாதேவி சமேத ஸ்ரீராமா், ஸ்ரீ லட்சுமணா், அனுமனுக்கும், கம்பத்து ஆஞ்சனேயருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பூஜைகளை பட்டாபி பட்டாச்சாரியாா் செய்துவைத்தாா். தொடா்ந்து, ஸ்ரீசீதாதேவி ராமா், சமேத லட்சுமணன் திருவீதி விழா நடைபெற்றது.

இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதி கோயில்களில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெற்றன.