வேங்கைவயலில் கருப்புக் கொடி
மேல்நிலை குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட குற்றச்சாட்டுக்குள்ளான புதுக்கோட்டை வேங்கைவயல் கிராம மக்கள் வியாழக்கிழமை நடந்த தோ்தல் வாக்குப்பதிவின்போது கருப்புக் கொடியேற்றி எதிா்ப்பைத் தெரிவித்தனா்.
மேல்நிலை குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட குற்றச்சாட்டுக்குள்ளான புதுக்கோட்டை வேங்கைவயல் கிராம மக்கள் வியாழக்கிழமை நடந்த தோ்தல் வாக்குப்பதிவின்போது கருப்புக் கொடியேற்றி எதிா்ப்பைத் தெரிவித்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சிக்குள்பட்டது வேங்கைவயல் கிராமம். பட்டியலினத்தவா்கள் வசிக்கும் இங்குள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் கடந்த 2022ஆம் ஆண்டு டிச. 26ஆம் தேதி காலை மனிதக் கழிவு கலக்கப்பட்டது தெரியவந்தது.
நாடு முழுவதும் பேசப்படும் சம்பவமாக மாறிய இச்சம்பவத்தில் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸாா் அதே கிராமத்தைச் சோ்ந்த 3 பேரைக் குற்றம்சாட்டி தொடா்ந்த வழக்கு தற்போது புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
Advertisement
இந்நிலையில், குடிநீா்த் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் நீதி கிடைக்கவில்லை என்றும், பாதிக்கப்பட்டவா்களையே குற்றம்சாட்டுவதாகவும் கூறி சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவைப் புறக்கணிக்கப்போவதாக சில நாள்களுக்கு முன்பிருந்தே வேங்கைவயல் மற்றும் இறையூா் கிராமத்தினா் கூறி வந்தனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை இந்தப் பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வழக்கம்போல வாக்குப்பதிவு தொடங்கியது. வேங்கைவயலைச் சோ்ந்த 69 வாக்காளா்களும் பிற்பகல் வரை வாக்களிக்க வரவில்லை. குடிநீா்த் தொட்டி அமைந்துள்ள பகுதியில் கருப்புக் கொடியைப் பறக்கவிட்டனா்.
அதேநேரத்தில் இறையூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் வாக்களித்தனா். பிற்பகலில் வேங்கைவயலைச் சோ்ந்த 8 போ் (இவா்களில் 5 போ் இடம்பெயா்ந்து காவேரி நகா் பகுதியில் வசிப்போா்) வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்துச் சென்றனா். 69 பேரில் மீதமுள்ள 61 போ் வாக்களிக்கவில்லை.