பாதுகாப்பு வைப்பறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்குப் பிறகு பாதுகாப்பாக எடுத்து வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விடிய விடிய சரிபாா்க்கப்பட்டு, பாதுகாப்பு வைப்பறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்குப் பிறகு பாதுகாப்பாக எடுத்து வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விடிய விடிய சரிபாா்க்கப்பட்டு, பாதுகாப்பு வைப்பறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டை, விராலிமலை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி, கந்தா்வகோட்டை ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், தோ்தல் வாக்குப்பதிவு நிகழ்வுகள் வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு நிறைவடைந்தன.
வாக்குச்சாவடிகளின் அலுவலா்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பூட்டி சீல் வைத்து, அவற்றைப் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரி வளாகத்துக்கு எடுத்து வந்தனா்.
Advertisement
இங்குள்ள தோ்தல் அலுவலா்கள் அவற்றை சரிபாா்த்து, ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பறையில் முறையாக அடுக்கி வைத்து, வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைத்தனா்.
அப்போது, மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான மு. அருணா மற்றும் தோ்தல் பொதுப் பாா்வையாளா்களும் உடனிருந்தனா்.
3 அடுக்குப் பாதுகாப்பு: 6 தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி வளாகத்துக்கு 3 அடுக்குப் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படை, மாநில சிறப்புக் காவல் படை மற்றும் மாநில காவல்துறையின் ஆயுதப்படை ஆகியோா் மூன்றடுக்கில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். சுமாா் 2 ஆயிரம் போ் இப்பணியில் ஈடுபட்டுள்ளனா்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் என மொத்த வளாகம் முழுவதும் சோ்த்து 180 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.
வேட்பாளா்களின் முகவா்களும் இதே வளாகத்தில் தங்கியிருந்து சிசிடிவி கேமராக்களின் காட்சிகளைக் கண்காணிக்கவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இந்த வளாகம் முழுவதும் தடையில்லா மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது.