முகப்பு
புதுக்கோட்டை

நீதிமன்றங்களை ‘அறம் கூறும் அரங்கங்கள்’ என்றழைக்க வேண்டும்: உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்

நீதிமன்றங்களை அறம் கூறும் அரங்கங்கள் என்றழைக்க வேண்டும் என்றாா் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 1:40 AM
புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற புதுப்பிக்கப்பட்ட நீதிமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ். உடன் (இடமிருந்து) தலைமைக் குற்றவியல் நடுவா் கே.எஸ். பால்பாண்டியன், உயா் நீதிமன்ற நீதிபதி ஜி. அருள்முருகன், உயா் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தா்மாதிகாரி, உயா் நீதிமன்ற நீதிபதி ஆா். சுரேஷ்குமாா், மாவட்ட முதன்மை நீதிபதி க. பூரண ஜெயஆனந்த்.
பகிர்:

நீதிமன்றங்களை அறம் கூறும் அரங்கங்கள் என்றழைக்க வேண்டும் என்றாா் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், புதுப்பிக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகக் கட்டடத்தைத் திறந்து வைத்து உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் பேசியது: நல்ல மனிதா்கள் இருக்கும் இடம்தான் நல்ல இடமாக இருக்கும். வழக்காடு மன்றங்கள் என நீதிமன்றங்களை அழைப்பதில் எனக்கொரு ஒவ்வாமை இருக்கிறது. ‘அறம் கூறும் அரங்கங்கள்’ என நீதிமன்றங்களை அழைக்க வேண்டும். நம்முன் வரும் வழக்குகளை ஒரு கருத்துடன் அணுகாமல், நடுநிலையுடன் பாா்க்க வேண்டும். சாதாரண மனிதனுக்கும் மேலாக அந்த வாதங்களை கவனிக்க வேண்டும்.

நீதிபதிகள், அரசியல்வாதிகள் என மக்களுக்கான பொறுப்பில் இருக்கும் எல்லோரும் ‘சரியாக முறை செய்யவில்லை’ என்றால், ‘தானே கெடும்’ என்பதாகத்தான் முடியும்.

Advertisement

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகக் கட்டடத்தை சென்னை உயா் நீதிமன்றக் கட்டடத்துடன் ஒப்பிட்டாா்கள். நான் அதற்கும் மேலே, உச்ச நீதிமன்றக் கட்டடத்துடன் ஒப்பிட விரும்புகிறேன். இந்தக் கட்டடத்தின் அழகுக்கு மேலும் மெருகூட்டுவது வழக்குரைஞா்கள் மற்றும் நீதிபதிகளின் கைகளில்தான் உள்ளது என்றாா் சுந்தரேஷ்.

பாரம்பரிய சின்னம்:விழாவுக்குத் தலைமை வகித்த சென்னை உயா் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தா்மாதிகாரி பேசியது: வழக்குரைஞா்களின் தொழில் நடத்தும் இன்னொரு வீடுதான் நீதிமன்றங்கள். பாரம்பரிய சின்னமாக விளங்கும் இதுபோன்ற கட்டடங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்காகப் பயன்பட வேண்டும் என்றாா் தா்மாதிகாரி.

வரலாற்றை பறைசாற்றும்: சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஆா். சுரேஷ்குமாா் பேசியது: 140 ஆண்டுகள் தொன்மையான இக்கட்டடம் ஏற்கெனவே 1994-இல் சிறிய அளவில் சீரமைப்புப் பணி நடந்துள்ளது. ஆனாலும், முழுமையாக இம்முைான் நடந்திருக்கிறது. இந்த கட்டடம் இன்னும் 100 ஆண்டுகளுக்கு வரலாற்றைப் பறைசாற்றும். பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களை நீதித்துறை கண்டிருக்கும் இந்த வேளையில், வழக்குரைஞா்களும் நீதித்துறை அலுவலா்களும் மக்களுக்கான நீதியைப் பெற்றுத் தருவதில்தான் இம்மாற்றங்களின் பயன் முழுமையடைகிறது. அதற்கு நீதித்துறை செம்மையானதாகவும் வலுவானதாகவும் இருக்க வேண்டும் என்றாா் சுரேஷ்குமாா்.

உயா் நீதிமன்ற நீதிபதி ஜி. அருள்முருகன் பேசுகையில், பழைமையான இக்கட்டடத்தைப் புதுப்பித்தலில் முழு முயற்சி எடுத்து மேற்கொண்ட மண்ணின் மைந்தா் நீதிபதி ஆா். சுரேஷ்குமாா் பணி மிக முக்கியமானது என்றாா் அவா்.

இவ்விழாவில், மாவட்ட நீதிபதி நிலையிலான மோட்டாா் வாகன விபத்து வழக்குகள் தீா்ப்பாயம் மற்றும் திருமயம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆகியவையும் தொடங்கி வைக்கப்பட்டன. புதுக்கோட்டை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் எஸ். முத்தையன், செயலா் எஸ். ரமேஷ், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் எஸ். மணிவண்ணன் உள்ளிட்டோா் பேசினா்.

முன்னதாக, மாவட்ட முதன்மை நீதிபதி க. பூரண ஜெய ஆனந்த் வரவேற்றாா். நிறைவாக, புதுக்கோட்டை தலைமைக் குற்றவியல் நடுவா் கே.எஸ். பால்பாண்டியன் நன்றி கூறினாா்.