கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! ஆயிரக்கணக்கில் இணையும் வேலையில்லா இளைஞர்கள்!
கரப்பான்பூச்சி மக்கள் கட்சி என்ற பெயரில் உருவான நையாண்டி கட்சியின் வாக்குறுதிகள் தனிக்கவனம் பெறுகின்றன.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்தின் பேச்சுக்கு எதிர்வினையாற்றும் வகையில் நாட்டில் ஒரு புதிய நையாண்டி கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. அதுதான் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி.
இதில் இணைவதற்கு நான்கு தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. வேலையில்லாமல், சோம்பேறியாக, ஆன்லைனில் எப்போதும் மூழ்கிக் கிடக்கும், ஆவேசமாக பேசும் திறன் கொண்ட இளைஞர்களாக இருக்க வேண்டும்.
ஆம் ஆத்மியின் சமூக ஊடகப் பிரிவில் இடம்பெற்றிருந்த அபிஜித் தீப்கே, இந்த நையாண்டி கட்சியை நிறுவியிருக்கிறார். வேலையில்லாத இளைஞர்களை கரப்பான்பூச்சி என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியிருந்த நிலையில், அதே கரப்பான்பூச்சி பெயரில் உருவாக்கப்பட்ட இந்தக் கட்சியில் இதுவரை 41 ஆயிரம் இளைஞர்கள் இணைந்துவிட்டனராம்.
Advertisement
Advertisement
போலிச் சான்றிதழ்கள் தொடர்பான வழக்கு விசாரணையின்போது நாட்டில் வாழும் வேலையில்லாத இளைஞர்களை கரப்பான்பூச்சிகள் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் குறிப்பிட்டிருந்ததாக செய்திகள் வெளியாகின.
இந்த கருத்துக்கு எதிர்வினையாற்றும் வகையில்தான் உடனடியாக கரப்பான்பூச்சி மக்கள் கட்சி உருவாக்கப்பட்டது.
ஆட்சியின் மீது விரக்தியடைந்த மக்களுக்கான இயக்கமாக உருவாக்கப்பட்டிருக்கும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி (சிஜேபி - Cockroach Janta Party) இதுவரை அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படவில்லை.
மதச்சார்பற்ற, சோசலிச, ஜனநாயக, சோம்பேறி - இதுதான் கட்சியின் கொள்கை. இந்த கொள்கைகளால் ஈரக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள். இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கிறார்கள்.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மஹுவா மொய்த்ரா, கீர்த்தி ஆசாத் போன்றவர்களும் இதில் இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கிடையே, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் கொடுத்த விளக்கத்தில், தன்னுடைய கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது, இளைஞர்களை நான் அவ்வாறு சொல்லவில்லை, போலிச் சான்றிதழ்களைக் கொடுத்து பணியாற்றுபவர்களையே அவ்வாறு குறிப்பிட்டேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால், கட்சி தொடங்கப்பட்டுவிட்டது, இளைஞர்களும் இணைந்து வருகிறார்கள்.
இந்த கட்சியின் வாக்குறுதிகளும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
1. ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவது தடை செய்யப்பட வேண்டும்
2. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்த்தப்படாமலே பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு
3. கட்சித் தாவும் எம்எல்ஏ, எம்பிக்கள் 20 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடத் தடை போன்ற மக்களைக் கவரும் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த கரப்பான்பூச்சி மக்கள் கட்சி, விரைவில் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படுமா? அல்லது டிஜிட்டல் புரட்சியில் ஈடுபடுமா? இல்லை, இந்திய இளைஞர்களிடையே வளர்ந்துவரும் அதிருப்தியை வெளிப்படுத்தும் ஒரு ஊடகமாக உருவெடுக்குமா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறார்கள் இதில் இணைந்திருப்பவர்கள்.
The Cockroach Janta Party is formed! Promises that receive special attention!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.