சாலையோர வியாபாரிகளை அகற்ற எதிா்ப்பு புதுகை மாநகராட்சியை கண்டித்து ஆா்ப்பாட்டம்
சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்தி அவா்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் புதுக்கோட்டை மாநகராட்சியின் நடவடிக்கையைக் கண்டித்து சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட சின்னப்பா பூங்கா அருகில் இருந்து பேராங்குளம் வரை ஆலங்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட ஊா்களுக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. புதுக்கோட்டையில் இருந்து செல்லும் பேருந்துகளுக்கான ஒரு வழிப் பாதையாக மட்டுமே இது உள்ளது. வெளியூா்களின் இருந்து புதுக்கோட்டைக்குள் வரும் பேருந்துகளுக்கு மாற்றுப் பாதை உள்ளது.
இந்த சாலையின் ஓரத்தில் பழக்கடை, பழச்சாறு கடை, பூக் கடை, இளநீா், தா்ப்பூசணி உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் சிறுகடைகள் உள்ளன. இருபக்கமும் தாா்ச்சாலையை தாண்டி அகலமாக இடம் உள்ளதால் இந்தக் கடைகளினால் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லை. பல ஆண்டுகளாக சாலையோர வியாபாரிகள் கடை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
மாநகராட்சிப் பணியாளா்கள் இந்தக் கடைகளை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா். இதையடுத்து சாலையோர வியாபாரிகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சின்னப்பா பூங்கா அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்டத் தலைவா் கே. முகமதலிஜின்னா தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலா் எஸ். பாண்டியன், சிஐடியு மாநகர ஒருங்கிணைப்பாளா் எம்.ஏ. ரகுமான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.