தமிழக அமைச்சா் பதவி விலகக் கோரி திமுக மாணவரணியினா் ஆா்ப்பாட்டம்! 109 போ் கைது!
பொது வெளியில் போதைப் பொருள் பயன்படுத்திய தமிழக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் டி. சரத்குமாா் பதவி விலகக் கோரி புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கியில் திமுக மாணவரணியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அறந்தாங்கி கலைஞா் கருணாநிதி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தெற்கு மாவட்ட மாணவா் அணி அமைப்பாளா் ஆ. கலைச்செல்வன் தலைமை வகித்தாா்.
அறந்தாங்கி முன்னாள் எம்.எல்.ஏ. உதயம் சண்முகம், மணமேல்குடி வடக்கு ஒன்றியச் செயலா் சக்திராமசாமி, திருவரங்குளம் மேற்கு ஒன்றியச் செயலா் தங்கமணி, அறந்தாங்கி தெற்கு ஒன்றியச் செயலா் பொன். கணேசன், நகரச் செயலா் க. ராஜேந்திரன், ஆவுடையாா்கோவில் தெற்கு ஒன்றியச் செயலா் பொன்துரை, கீரமங்கலம் பேரூா் செயலா் சிவகுமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். இவா்கள் தவெக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.
Advertisement
Advertisement
அப்போது, தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 59 பேரைக் கைது செய்து அருகிலுள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்த போலீஸாா், மாலையில் விடுவித்தனா்.
புதுக்கோட்டையில்..: புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்து திமுகவினா், வடக்குமாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் தலைமையில் திங்கள்கிழமை மாலை ஊா்வலமாகப் புறப்பட்டனா். பிருந்தாவனம் முக்கத்தில் அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அப்போது தவெக அரசைக் கண்டித்தும், அமைச்சரை பதவி நீக்கம் செய்யக் கோரியும் முழக்கங்களை எழுப்பிய 50 திமுகவினரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்தப் போராட்டத்தில், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் இராசு. கவிதைப்பித்தன், மாநகர திமுக செயலா் ராஜேஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.