முகப்பு
தஞ்சாவூர்

"சாகுபடி மேற்கொள்வது குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும்

மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால் நிகழாண்டு சாகுபடி மேற்கொள்ளலாமா என்பது குறித்து விவசாயிகளுக்குத் தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.

Updated On : 12 மே 2013, 6:27 am IST
பகிர்:

மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால் நிகழாண்டு சாகுபடி மேற்கொள்ளலாமா என்பது குறித்து விவசாயிகளுக்குத் தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.

தஞ்சாவூரில் சனிக்கிழமை மாலை அவர் அளித்த பேட்டி: மேட்டூர் அணை குட்டை போல வறண்டு விட்டது. எனவே, வருகிற பருவத்தில் சாகுபடி செய்ய முடியுமா முடியாதா என்ற குழப்பத்தில் விவசாயிகள் உள்ளனர். இதை தெளிவுபடுத்தும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.

மழை பெய்யும் என்றாலும் அதை மட்டுமே நம்பியிருந்து சாகுபடி மேற்கொள்ள முடியாது. எனவே, சாகுபடி செய்யலாமா வேண்டாமா என்பது குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

Advertisement

Advertisement

ஏற்கெனவே கடந்த ஆண்டு விவசாயிகள் சாகுபடி செய்து இழப்பைச் சந்தித்துள்ளனர். எனவே, அரசு தெளிவுபடுத்த வேண்டிய அவசியமான நிலை உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் தாற்காலிக குழுவை அமைப்பதால் எந்தவித பயனும் கிடைக்காது. இந்தக் குழு விவசாயிகளுக்கு எந்த வகையிலும் உதவாது.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்துவது சட்டத்துக்குப் புறம்பானது.

இந்தத் தாற்காலிகக் குழுவில் கர்நாடக மாநிலத் தலைமைச் செயலரும் இணைக்கப்பட்டுள்ளார். இந்தக் குழு துறைச் செயலர்கள் அளவிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவை பிரதமரும், துறை சம்பந்தப்பட்டவர்களும்தான் உருவாக்க வேண்டும்.

ஆனால், கர்நாடகத்தில் தேர்தல் நடைபெறுகிறது என தேவையற்ற காரணத்தைக் கூறி காலம் தாழ்த்துகின்றனர். இப்போது அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. இனிமேலாவது உடனடியாக வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் வீரமணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.