மேலாண்மை வாரியம் கோரி மத்திய அரசுக்கு கோடிக்கணக்கில் மின்னஞ்சல்: ஜி.கே. வாசன் தகவல்
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்குக் கோடிக்கணக்கில் மின்னஞ்சல் அனுப்பப்படும் என்றார் தமாகா தலைவர் ஜி.கே. வாசன்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்குக் கோடிக்கணக்கில் மின்னஞ்சல் அனுப்பப்படும் என்றார் தமாகா தலைவர் ஜி.கே. வாசன்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையப் பகுதியில் தமாகா சார்பில் புதன்கிழமை நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்த பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். மத்திய அரசுக்கு மாநில அரசு முறையான அழுத்தம் கொடுக்க வேண்டும். அதற்கு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்காக டெல்டாவின் அனைத்து மாவட்டங்களிலும் இந்தக் கையெழுத்து இயக்கம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், புதன்கிழமை காலை முதல் லட்சக்கணக்கில் பிரதமர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டு வருகிறது. தமாகா நடத்தும் இந்த இயக்கத்தின் மூலம் பிரதமருக்கு கோடிக்கணக்கில் மின்னஞ்சல் சென்றடையும். திருச்சியில் ஏப். 6-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம் என்றார் வாசன்.
பின்னர், அவர் பேசியது:
காவிரி மேலாண்மை வாரியத்தைப் பெறுவது நமது உரிமை. அதைச் செய்வது மத்திய அரசின் கடமை.
ஆனால், தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசுத் துரோகம் செய்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக நடைபெறும் அனைத்துப் போராட்டங்களிலும் தமாகா ஆதரவு அளித்து பங்கேற்கும். பொதுமக்களைச் சிரமப்படுத்தாமல் நடத்தப்படும் போராட்டங்களுக்கு மக்களும் ஆதரவு அளிப்பர் என்றார் வாசன்.
இந்நிகழ்ச்சியில் தமாகா மாவட்டத் தலைவர் என்.ஆர். ரெங்கராஜன் (தெற்கு), ஏ. ஜிர்ஜிஸ் (வடக்கு) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.