காவிரி மேலாண்மை வாரியம் கோரி குடியரசுத் தலைவருக்கு அஞ்சல் அட்டைகளை அனுப்பிய திமுகவினர்
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தில் குடியரசுத் தலைவருக்கு 7,000 அஞ்சல் அட்டைகளை திமுகவினர் செவ்வாய்க்கிழமை அனுப்பினர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தில் குடியரசுத் தலைவருக்கு 7,000 அஞ்சல் அட்டைகளை திமுகவினர் செவ்வாய்க்கிழமை அனுப்பினர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே மத்திய அரசு அமைக்க வேண்டும். மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தை தமிழக அரசு கொடுக்க வேண்டும். மேலாண்மை வாரியம் அமைக்காமல் விவசாயிகளையும், தமிழகத்தையும் வஞ்சிக்காதே என முழக்கங்கள் எழுப்பியபடி தலைமை அஞ்சலகம் முன் உள்ள அஞ்சல் பெட்டியில் அஞ்சல் அட்டைகளைப் போட்டனர். இந்த இயக்கத்துக்குத் தலைமை வகித்த திமுக தெற்கு மாவட்டச் செயலரும், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான துரை. சந்திரசேகரன் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் திருச்சி மாவட்டம் முக்கொம்பு பகுதியில் இருந்து காவிரி உரிமை மீட்பு நடைபயணம் மேற்கொண்டார். அப்போது, விவசாயிகளிடம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி அஞ்சல் அட்டைகளைக் கொடுத்தார். இவற்றில் விவசாயிகள் கையெழுத்திட்டு கொடுத்தனர். அவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கிறோம். முதல் கட்டமாக தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தில் 7,000 அஞ்சல் அட்டை அனுப்புகிறோம். தொடர்ந்து விவசாயிகள், பொதுமக்கள் அஞ்சல் அட்டையைக் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பர் என்றார் அவர்.
திமுக தலைமைக் கழக உறுப்பினர் து. செல்வம், மாநகரச் செயலர் டி.கே.ஜி. நீலமேகம், தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சண். ராமநாதன், மருத்துவர் அணி அமைப்பாளர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.