சிலை திருட்டு வழக்கு: 5 பேருக்கு ஜாமீன்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் காணாமல் போன 9 சிலைகளை திருடியதாகக் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் காணாமல் போன 9 சிலைகளை திருடியதாகக் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு கும்பகோணம் நீதிமன்றம் திங்கள்கிழமை நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கியது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெருபுகை கிராமத்தில் சுமார் 1200 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீ ஆயிரத்துதெட்டு மல்லிநாத ஜினாலயம் என்கிற ஜெயின் கோயில் உள்ளது. இக்கோயிலில் செப். 15-ம் தேதி கதவு மற்றும் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ஐம்பொன்னாலான 9 சிலைகளையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரித்து 8 சிலைகளை மீட்டனர். மேலும் ஒரு சிலையைத் தேடி வருகின்றனர். இந்த சிலை திருட்டு சம்பவம் தொடர்பாக மேகநாதன் (35), சுரேஷ் (35), அலிபாட்ஷா (எ) செளக்கத் அலி (24), ராஜசேகர் (27), சந்தானகிருஷ்ணன் (37) ஆகிய 5 பேரையும் போலீஸார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சுரேஷ், சந்தானகிருஷ்ணன் ஆகியோர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஜாமீன் கோரினர். இவ்வழக்கு நடைபெறும் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜராகி இரு நபர் ஜாமீன் பெறுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி, சுரேஷ், சந்தானகிருஷ்ணன், மேகநாதன், அலிபாட்ஷா, ராஜசேகர் ஆகியோர் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். கும்பகோணம் கூடுதல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நாள்தோறும் காலை 10 மணிக்கு 5 பேரும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி நீதிபதி அய்யப்பன்பிள்ளை உத்தரவிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.