புயல் பாதிப்பு நிவாரணம் கோரி 4 இடங்களில் சாலை மறியல்
கஜா புயல் பாதிப்பு கணக்கெடுப்பில் தஞ்சாவூர் ஒன்றியம் விடுபட்டதாகக் கூறியும், நிவாரணம் வழங்க
கஜா புயல் பாதிப்பு கணக்கெடுப்பில் தஞ்சாவூர் ஒன்றியம் விடுபட்டதாகக் கூறியும், நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் தஞ்சாவூர் அருகே 3 இடங்களில் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
கஜா புயலால் தஞ்சாவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மருங்குளம், கொல்லாங்கரை, வடக்குப்பட்டு, வேங்கராயன்குடிக்காடு, அதினாம்பட்டு, வல்லுண்டாம்பட்டு, நாஞ்சிக்கோட்டை,
சூரியம்பட்டி, கோபால் நகர், நாகப்புடையான்பட்டி உள்பட இருபதுக்கும் அதிகமான கிராமங்களில் சோளம், தென்னை, தேக்கு, முந்திரி, நெல், கரும்பு ஆகியவையும், ஏராளமான வீடுகளும் சேதமடைந்தன.
ஆனால், கஜா புயல் பாதிப்புக் காரணமாக தஞ்சாவூர் ஒன்றியத்துக்குட்பட்ட நாஞ்சிக்கோட்டை வருவாய் சரகத்தில் உள்ள கிராமங்களில் பாதிப்புகள் ஏதும் இல்லை எனக் கூறி இதுவரை தமிழக அரசு நிவாரணம் ஏதும் வழங்காமல் உள்ளதாகவும், புயல் பாதிப்பை அரசு அலுவலர்கள் மறைக்க முயல்வதாகவும் கூறி அதிருப்தியடைந்த சுமார் 20 கிராம மக்கள் மருங்குளம் நான்கு சாலை சந்திப்பில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சக்திவேல் தலைமையில் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தமிழக அரசு தஞ்சாவூர் ஒன்றியத்தையும் கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதியாகச் சேர்த்து, அதற்குரிய நிவாரணங்களை வழங்கக் கோரியும், பம்புசெட்களுக்கு உடனடியாக மின் இணைப்புகளை வழங்க வலியுறுத்தியும், கையில் காய்ந்து பதரான நெல் மணிகளை வைத்துக் கொண்டு முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து நிகழ்விடத்துக்குச் சென்ற தஞ்சாவூர் வட்டாட்சியர் ப. அருணகிரி, வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ். ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் நிவாரணம் பெற்றுத் தருவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை அடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இப்போராட்டத்தால் கறம்பக்குடி - தஞ்சாவூர் சாலையில் சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருக்கானூர்பட்டியில்.... இதேபோல, தஞ்சாவூர் - புதுக்கோட்டை சாலையில் திருக்கானூர்பட்டியில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மேலும், அற்புதாபுரத்தில் தோழகிரிப்பட்டி, மேட்டுப்பட்டி, அற்புதாபுரம் ஆகிய கிராம மக்கள் நிவாரணம் வழங்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் போலீஸார், வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
ஒரத்தநாட்டில்... ஒரத்தநாடு வட்டம், செல்லம்பட்டி கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இதுவரையில் அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படாததை கண்டித்தும், சேதமடைந்த வீடுகளுக்கான உரிய நிவாரணத் தொகை வங்கியில் வரவு வைக்கப்படவில்லை என கூறியும், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திங்கள்கிழமை செல்லம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஒரத்தநாடு போலீஸார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.