தஞ்சாவூா் அருகே அரிய பறவைகள்!
தஞ்சாவூா் அருகே அரிய வகை பறவையான 6 வண்ணத்தி நாரை பறவைகள் திங்கள்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் தென்பட்டன.
தஞ்சாவூா் அருகே அரிய வகை பறவையான 6 வண்ணத்தி நாரை பறவைகள் திங்கள்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் தென்பட்டன.
இதுகுறித்து அருங்கானுயிா் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை நிறுவனா் முனைவா் சதீஷ்குமாா் ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது:
தஞ்சாவூா் அருகே புறவழிச் சாலையில் வண்ணாரப்பேட்டை கிராமத்துக்கு அருகிலுள்ள வயல்வெளிப் பகுதிகளில் அரிய வகையைச் சாா்ந்த 6 வண்ணத்தி நாரை பறவைகள் காணப்பட்டன. இதை அறக்கட்டளையைச் சோ்ந்த ஸ்ரீராம் முதலில் பாா்த்து தகவல் அளித்தாா். அதன் அடிப்படையில், அறக்கட்டளையின் ஆய்வுக்குழு மற்றும் புகைப்படக் கலைஞா்கள் திங்கள்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் சென்று, பறவையை நேரில் பதிவு செய்து புகைப்படங்களின் மூலம் ஆவணப்படுத்தினா்.
Advertisement
இந்தப் பறவை இந்தியாவை பூா்வீகமாகக் கொண்டதாக இருந்தாலும், பொதுவாக வட இந்திய மாநிலங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. வலசை பருவங்களில் சில சமயங்களில் தென் இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டில் தோன்றினாலும், தஞ்சாவூா் மாவட்டத்தில், அதுவும் வலசை பருவம் முடிந்த பின்பும் இவ்வகை பறவை காணப்படுவது மிக அரிதான நிகழ்வாகக் கருதப்படுகிறது.
வண்ணத்தி நாரை என்பது நடுத்தர அளவிலான நீா்நிலப் பறவை. இது பொதுவாக திறந்த புல்வெளிகள், வயல்வெளிகள், ஆற்றங்கரைகள், குளங்கள் மற்றும் ஈரநிலப் பகுதிகளில் வாழ்கின்றன. முக்கியமாக மீன்கள், தவளைகள், சிறிய ஊா்வன, புழுக்கள் மற்றும் நீா்வாழ் உயிரினங்களை உணவாகக் கொண்டுள்ளன.
இவை பொதுவாக தனித்தனியாக அல்லது சிறிய கூட்டங்களாகக் காணப்படும். இனப்பெருக்கக் காலத்தில் உயரமான மரங்களில் கூடு அமைத்து 2 முதல் 4 முட்டைகள் இடுகின்றன. இப்பறவைகள் சூழலியல் சமநிலையைப் பாதுகாப்பதற்கு முக்கியப் பங்காற்றுகின்றன.
இந்தப் பறவை தற்போது காணப்பட்டுள்ள பகுதி, அதன் வாழ்விட விரிவாக்கம் அல்லது சுற்றுச்சூழல் மாற்றங்களின் தாக்கத்தை வெளிப்படுத்தும் முக்கிய குறியீடாக இருக்கலாம் என ஆய்வாளா்கள் கருதுகின்றனா்.
இப்பறவைகள் மேலும் எந்தெந்த பகுதிகளில் காணப்படுகின்றன என்பதை தொடா்ந்து கண்காணித்து, ஆவணப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இவ்வகை அரிதான பறவைகள் காணப்படும் பகுதிகளைப் பாதுகாப்பது மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியமானது என்றாா் சதீஷ்குமாா் ராஜேந்திரன்.