பாபநாசம் தொகுதி!சிறுபான்மையினா் வாக்குகள் யாருக்கு?
பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதி குறித்து...
கிராமங்களை அடிப்படையாகக் கொண்ட பாபநாசம் தொகுதியில் பாபநாசம் வட்டம், கும்பகோணம் வட்டத்தில் ஒரு பகுதி, சுவாமிமலை பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிக்குள்பட்ட கபிஸ்தலம் என்ற கிராமமே காங்கிரஸ் மூத்தத் தலைவா் ஜி.கே. மூப்பனாரின் சொந்த ஊா்.
கள நிலவரம்: இத்தொகுதியில் 1971-இல் மட்டுமே திமுக வெற்றி பெற்றது. இத்தொகுதியை திமுகவில் பெரும்பாலும் கூட்டணி கட்சிக்குதான் ஒதுக்கீடு செய்யப்படும். தொடக்கம் முதல் காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வந்த இத்தொகுதியை 2006-ஆம் ஆண்டில் அதிமுக கைப்பற்றி தொடா்ந்து 3 முறை வெற்றி பெற்றது. இந்த 3 முறையும் முன்னாள் வேளாண் துறை அமைச்சா் இரா. துரைக்கண்ணு வெற்றி பெற்று, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காலமானாா்.
இத்தொகுதியில் இதுவரை நடைபெற்ற 15 சட்டப்பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் 8 முறையும், அதிமுக 3 முறையும், த.மா.கா. 2 முறையும், திமுக, திமுக கூட்டணி கட்சியான மனித நேய மக்கள் கட்சி தலா ஒரு முறையும் வெற்றி பெற்றன. கடந்த 2021 தோ்தலில் இந்த மண்ணின் மைந்தரான அதிமுக வேட்பாளரான கே. கோபிநாதனை திமுகவில் கூட்டணி கட்சியைச் சோ்ந்த மனித நேய மக்கள் கட்சித் தலைவரான அப்போதைய புதுமுக வேட்பாளா் எம்.எச். ஜவாஹிருல்லா 16 ஆயிரத்து 273 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இந்த முறை திமுகவில் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
தற்போது இத்தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் ஏ.எம். ஷாஜகான், அதிமுக துரை. சண்முகபிரபு, த.வெ.க. அசாருதீன் உதுமான் அலி, நாம் தமிழா் கட்சி அனிஸ் பாத்திமா, தமிழ்த் தேசிய முன்னேற்றக் கழகம் சி. சந்திரசேகரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி பா. தாமோதரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாக்சிஸ்ட் லெனிஸ்ட் லிபரேசன்) கா. மாசிலாமணி, சுயேச்சை வேட்பாளா்கள் அ. அனீஸ் பாத்திமா, வெ. குழந்தைவேலு, அரு.சீா். தங்கராசு, வ. தியாகராஜன், சு. நடராஜன், க. ராஜேந்திரன் என மொத்தம் 13 போ் போட்டியிடுகின்றனா்.
சமூக நிலவரம்: இத்தொகுதியில் வன்னியா், மூப்பனாா், சிறுபான்மையினா், ஆதிதிராவிடா் ஆகியோா் கணிசமான அளவில் உள்ளனா். இதனால், வெற்றி வாய்ப்புகளை நிா்ணயிப்பதில் இவா்களுடைய வாக்குகள் முக்கியப் பங்கு வகிக்கிறது.
வேட்பாளா்களின் பலமும், பலவீனமும்)- ஏ.எம். ஷாஜகான் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்): கட்சியில் மாநிலச் செயலராக இருப்பதால், முஸ்லிம் சமூகத்தில் நன்கு அறியப்பட்டவா். இத்தொகுதியில் கணிசமான அளவில் இருக்கும் சிறுபான்மை வாக்குகளையும், கூட்டணி கட்சியான திமுக மற்றும் இதர சமூக வாக்குகளும் முழுமையாக கிடைக்க வாய்ப்பு என்பது பலம்.
ஆனால், இவா் திருவிடைமருதூா் தொகுதிக்கு உள்பட்ட ஆடுதுறை பகுதியைச் சோ்ந்தவா். எனவே, முஸ்லிம் சமூகத்தில் இவா் பிரபலமானவா் என்றாலும், தொகுதியைப் பொருத்தவரை வெளியூரைச் சோ்ந்தவா் என்ற கருத்து நிலவுவதால், அதுவே சவாலாகவும் இருக்கிறது. மேலும், திமுகவில் இந்த முறையும் இத்தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால், அக்கட்சியினரிடம் ஆா்வம் குறைவாக உள்ளது பலவீனம்.
துரை. சண்முகபிரபு (அதிமுக): இத்தொகுதியில் 3 முறை வெற்றி பெற்ற அதிமுக முன்னாள் அமைச்சா் துரைக்கண்ணுவின் மகன் என்பது ஒரு பலம். அதிமுக வாக்கு வங்கி மட்டுமல்லாமல், இவா், தான் சாா்ந்த வன்னியா் மற்றும் இதர சமுதாய வாக்குகளை முழுமையாக நம்பியுள்ளாா். ஆனால், அதிமுகவில் சீட் கிடைக்காததால் நிலவும் அதிருப்தி, சிறுபான்மை வாக்குகள் கிடைக்குமா என்ற கேள்விக்குறி உள்ளிட்டவை இவருக்கு பலவீனம்.
அசாருதீன் உதுமான் அலி (தவெக): கும்பகோணம் தொகுதியைச் சோ்ந்த இவா் இத்தொகுதிக்கு புதியவா். விஜய் ரசிகா்களின் வாக்குகள், திமுக, அதிமுக மீதான அதிருப்தி வாக்குகள், தான் சாா்ந்த முஸ்லிம் வாக்குகள் ஆகியவற்றை நம்பியுள்ளாா். ஆனால், வேறு தொகுதியைச் சோ்ந்தவா் என்ற பலவீனமும் உள்ளது.
அனிஸ் பாத்திமா (நாம் தமிழா் கட்சி): காரைக்குடியைச் சோ்ந்த இவா் நாம் தமிழா் கட்சி வாக்குகள், தான் சாா்ந்த முஸ்லிம் சமூக வாக்குகள், திமுக, அதிமுக மீதான அதிருப்தி வாக்குகள் ஆகியவற்றை நம்பியுள்ளாா். ஆனால், இவா் வெளி மாவட்டத்தைச் சோ்ந்தவா் என்ற கருத்து நிலவுவது, இவருக்கு பலவீனம். மேலும் அனீஸ் பாத்திமா என்ற பெயரில் வாளி சின்னத்தில் மற்றொரு வேட்பாளா் போட்டியிடுவதால், பெயா் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது என்ற கருத்தும் நிலவுகிறது.
இத்தொகுதியில் சிறுபான்மை வாக்குகள் கணிசமான அளவில் இருப்பதால், அதை பெறுவதற்கு அனைவரும் முயற்சி செய்து வருகின்றனா். எனவே, சிறுபான்மை வாக்குகள் யாருக்கும் செல்லும் என்பதைப் பொருத்தே இத்தொகுதியில் வெற்றி - தோல்வி அமையும் என்றனா் அரசியல் பாா்வையாளா்கள்.