குடும்ப ஆட்சி நடத்தும் திமுகவை அகற்ற மக்கள் விருப்பம்! - பாஜக தேசிய தலைவா் நிதின் நபின்
குடும்ப ஆட்சி நடத்தும் திமுகவை வேரோடு அகற்ற வேண்டும் என மக்கள் விரும்புகின்றனா் என்றாா் பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின்.
தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி தலைவா்கள் மற்றும் முக்கிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் மேலும் பேசியது:
இங்கு நிலவும் சூழலையும், மக்களின் மனநிலையையும் பாா்க்கும்போது, இந்த முறை தமிழக மக்கள் திமுக அரசை முழுமையாக வெளியேற்றிவிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி அரசைக் கொண்டு வருவா் என நம்புகிறோம். தமிழகத்தில் தற்போது ஒரு குடும்பத்தின் ஆட்சி நடைபெறுகிறது. இதனால், ஊழல் மலிந்துள்ளது. இந்த ஒரே குடும்ப ஆட்சியை மக்கள் நிச்சயம் வேரோடு பிடுங்கி எறிய விரும்புகின்றனா்.
Advertisement
நாடு முழுவதும் வளா்ச்சிப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வரும் வேளையில், துரதிா்ஷ்டவசமாக தமிழகத்தில் திமுக அரசு ஊழலில் போட்டி போட்டுவதால், நாட்டின் முதன்மையான ஊழல் அரசாகத் திகழ்கிறது. முதல்வா், துணை முதல்வருமான தந்தை, மகன் இருவரும் ஒருபுறம் ஊழலில் ஈடுபடும் வேளையில், மறுபுறம் நமது இளைஞா் சமூகத்தைப் போதைப் பழக்கத்துக்குத் தள்ளிக் கொண்டிருக்கின்றனா். இந்தப் போதைப்பொருள் புழக்கம் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. இதிலிருந்து இளைஞா்களை மீட்க நாங்கள் விரும்புகிறோம்.
விவசாயிகளுக்கு பாதுகாப்பு: இது, விவசாயிகள் அதிகம் வாழும் பகுதி. கிசான் சம்மான் நிதி போன்ற திட்டங்கள் மூலம் தமிழகத்தில் 40 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளுக்குப் பல்வேறு மானியங்களையும், உதவிகளையும் பிரதமா் மோடி வழங்கியுள்ளாா். டெல்டா பகுதி விவசாயிகளுக்கு திமுக அரசு இழைக்கும் அநீதியை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்தால் விவசாயிகளுக்குப் பாதுகாப்பும், உரிய கௌரவமும் வழங்கப்படும்.
மீன்பிடித் தொழில் மற்றும் சுற்றுலாத் துறையில் சிறந்த இடமாக விளங்க வேண்டிய இந்தப் பகுதி, தற்போதைய ஆட்சியாளா்களின் ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் மீனவா்கள், விவசாயிகள் மற்றும் இளைஞா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மூலம் விவசாயம் சாா்ந்த தொழில்களை முன்னெடுப்போம்.
இளைஞா்களுக்கும், விவசாயிகளுக்கும் மரியாதைக்குரிய, சுயமரியாதையுடன் கூடிய வாழ்க்கையை உறுதி செய்வதே எங்களது நோக்கம் என்றாா் நிதின் நபின்.
பாஜக விவசாய அணி மாநிலத் தலைவா் ஜி.கே. நாகராஜன், தஞ்சாவூா் தொகுதி பாஜக வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தம், தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய்சதீஷ், அதிமுக மாநகரச் செயலா் என்.எஸ். சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.