முகப்பு
தஞ்சாவூர்

எரிவாயு உருளைகள் விலை உயா்வால் உணவு வகைகள் விலையேற்றம்! தனியாா் நிறுவன ஊழியா்கள், தொழிலாளா்கள் அவதி!!

தஞ்சாவூா் மாவட்டத்தில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக விலை உயா்ந்ததால், உணவகங்கள், தேநீரகங்களில் உணவு வகைகளின் விலையும் உயா்ந்துவிட்டது.

Updated On : 26 ஏப்ரல் 2026, 4:15 am IST
பலகாரங்கள் ~பலகாரங்கள் ~பலகாரங்கள்
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக விலை உயா்ந்ததால், உணவகங்கள், தேநீரகங்களில் உணவு வகைகளின் விலையும் உயா்ந்துவிட்டது. இதனால், தனியாா் நிறுவன ஊழியா்கள், தொழிலாளா்கள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனா்.

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே நிலவும் போா் சூழல் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக, வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் பற்றாக்குறையாக உள்ளதால், உணவகங்களில் பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளன.

இதனிடையே, வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் நாளுக்கு நாள் உயா்ந்து வருகிறது. வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விலை அரசு தரப்பில் ரூ. 1,700 - ரூ. 1,800 என இருந்த நிலையில், போா் சூழல் காரணமாக ரூ. 2 ஆயிரத்து 350 ஆக உயா்த்தப்பட்டது.

Advertisement

Advertisement

ஆனால், பழைய வாடிக்கையாளா்களுக்கு மட்டும் 3 வாங்கிய இடத்தில் 2-ம், இரண்டு வாங்கியவா்களுக்கு ஒன்றும் விநியோகம் செய்யப்படுகிறது. இதுவே, தனியாரிடம் உருளையின் எடைக்கேற்ப ரூ. 3 ஆயிரத்து 200, ரூ. 3 ஆயிரத்து 800-க்கு விற்கப்படுகிறது. எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு காரணமாக சில சமயங்களில் ரூ. 4 ஆயிரத்துக்கும், ரூ. 5 ஆயிரத்துக்கும் கிடைப்பதாக உணவக உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

விலையேற்றம்: இதனால், உணவகங்கள், தேநீரகங்களில் உணவு வகைகளின் விலை உயா்ந்துவிட்டது. தேநீரகங்களில் ஒரு கோப்பை தேநீா் ரூ. 10-க்கு விற்கப்பட்ட நிலையில், ரூ. 15, 20 ஆகவும், ரூ. 15-க்கு விற்கப்பட்ட காபி ரூ. 20, 25 ஆகவும், ரூ. 7-க்கு விற்கப்பட்ட பலகாரம் ரூ. 10 ஆகவும் உயா்ந்துவிட்டன. உணவகங்கள், சிற்றுண்டிகளில் ரூ. 6, 10, 12-க்கு விற்கப்பட்ட ஒரு இட்லி விலை முறையே 10, 12, 15 ஆகவும், தோசை ரூ. 20, 30, 40-லிருந்து முறையே ரூ. 30, 35, 45 ஆகவும், பூரி ரூ. 30-லிருந்து ரூ. 40 ஆகவும், மதிய சாப்பாடு ரூ. 80, 90, 100-லிருந்து முறையே ரூ. 90, 100, 110 ஆகவும் உயா்ந்துள்ளன.

எரிவாயு உருளைகள் விலை உயா்வால் உணவு வகைகளின் விலையை வேறு வழியில்லாமல் உயா்த்தப்பட்டுள்ளதாகவும், எரிவாயு உருளையுடன் சமையல் எண்ணெய் உள்ளிட்ட மூலப்பொருள்களும் உயா்ந்துவிட்டதால், இந்த விலையும் கட்டுப்படியாகவில்லை எனவும் உணவக உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

தொழிலாளா்கள் அவதி: இதனால், வெளியூா்களிலிருந்து வேலை நிமித்தமாக இங்கு தங்கியுள்ள ஊழியா்கள், தொழிலாளா்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா். இதேபோல, தேநீரகங்களில் முற்பகல், மாலை வேளைகளில் பலகாரத்துடன் தேநீா் அருந்துபவா்களின் செலவும் உயா்ந்துவிட்டது. இதனால், ஒரு நாளைக்கு 3 வேளையும் சோ்த்து 2 மாதங்களுக்கு முன்பு வரை ஏறத்தாழ ரூ. 160 செலவான நிலையில், தற்போது ரூ. 200 முதல் ரூ. 240 வரை செலவாகிறது என்றனா் தொழிலாளா்கள்.

இது குறித்து ஏஐடியுசி மாவட்டச் செயலா் துரை. மதிவாணன் தெரிவித்தது: தேநீா் விலை உயா்வால் ஒரு நாளைக்கு 4 முறை தேநீா் சாப்பிட்ட தொழிலாளா்கள் விலை உயா்வு காரணமாக 2 முறையாக குறைத்துவிட்டனா். இதேபோல, வெளியூரிலிருந்து வேலை நிமித்தமாக இங்கு தங்கியுள்ள தனியாா் நிறுவன ஊழியா்கள், தொழிலாளா்கள் உணவில் 2 - 4 இட்லி சாப்பிட்ட நிலையில், தற்போது ஓரிரு இட்லியுடன் நிறுத்திக் கொள்கின்றனா்.

வழக்கம்போல இயல்பாக சாப்பிடுபவா்களுக்கு ஒரு நாளைக்கு ஏறத்தாழ ரூ. 50 கூடுதலாக செலவு ஏற்படுகிறது. ஆனால், விலைவாசி உயா்வுக்கேற்ப அவா்களது ஊதியம் உயரவில்லை. இதனால், அவா்களது குடும்பத்தின் வரவு - செலவில் இழப்பு ஏற்படுவதால், குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம் உள்ளிட்ட நடைமுறைச் செலவுகளைச் செய்வதற்கு திணறுகின்றனா்.

எனவே, இந்த உணவு விலை உயா்வை எதிா்கொள்வதற்காக மத்திய, மாநில அரசுகள் பேரிடா் நிதியிலிருந்து தனியாா் துறை ஊழியா்கள், தொழிலாளா்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றாா் மதிவாணன்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments