முகப்பு
தஞ்சாவூர்

50 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறை: சம்பா பருவத்தில் 6.21 லட்சம் டன் நெல் கொள்முதல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் 50 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக சம்பா பருவத்தில் 6.21 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 29 ஏப்ரல், 2026 at 1:46 AM
தஞ்சாவூா் அருகே நெல்கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்படும் நெல் மூட்டைகள் (கோப்புப்படம்).
பகிர்:

நமது நிருபா்

தஞ்சாவூா் மாவட்டத்தில் 50 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக சம்பா பருவத்தில் 6.21 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2025 ஆண்டில் மேட்டூா் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட்டதால், குறுவை சாகுபடியில் இலக்கை விஞ்சி 1.99 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. ஏக்கருக்கு இயல்பாக 30 முதல் 35 மூட்டைகள் மகசூல் கிடைக்கும் நிலையில், கடந்த ஆண்டு குறுவை பருவத்தில் பெரும்பாலான விவசாயிகளுக்கு சராசரியாக 45 முதல் 75 முட்டைகள் வரை விளைச்சல் கிடைத்தது.

Advertisement

இதன் மூலம், மாவட்டத்திலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த குறுவை பருவத்தில் 2.60 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டது. இது, அதற்கு முந்தைய ஆண்டு (2024) குறுவை பருவத்தை விட 1.32 லட்சம் டன் கூடுதல்.

1.16 லட்சம் டன் கூடுதல்: இதேபோல, மாவட்டத்தில் சம்பா - தாளடி பருவத்தில் கிட்டத்தட்ட 3.24 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. முன் பட்டத்தில் விளைச்சல் குறைவாக இருந்தாலும், பின் பட்டத்தில் இயல்பான அளவும், சிலருக்கு இயல்பை விட அதிகமாகவும் மகசூல் கிடைத்தது. மாவட்டத்தில் ஜனவரி மாதத்திலிருந்து ஏறத்தாழ 650 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இதன் மூலம் 6.21 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. மாவட்டத்தில் 2025- ஆம் ஆண்டு சம்பா பருவத்தில் 5.03 லட்சம் டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், நிகழ் சம்பா பருவத்தில் 1.16 லட்சம் டன் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

முதல்முறை: தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் தொடங்கப்பட்டு, 50 ஆண்டு கால வரலாற்றில் சம்பா பருவத்தில் 6.21 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்றாா் கழகத்தின் தஞ்சாவூா் முதுநிலை மண்டல மேலாளா் நெ. செல்வம்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: நிகழ் சம்பா பருவத்தில் 6.21 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 1.28 லட்சம் விவசாயிகளுக்கு, அவரவா் வங்கிக் கணக்குக்கு ரூ. 1,570 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 2025 செப்டம்பா் 1-ஆம் தேதி தொடங்கிய நிகழ் கொள்முதல் ஆண்டில் இதுவரை 8.81 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

12 லட்சம் டனுக்கு குறையாது: அடுத்து கோடை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் 4 லட்சம் டன் நெல் கொள்முதலாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, மாவட்டத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் நிகழ் கொள்முதல் ஆண்டில் நெல் கொள்முதல் மொத்தம் 12 லட்சம் டன்னுக்கு குறையாது என்றாா் அவா்.

சாதனை அளவு: மாவட்டத்தில் முன்பு ஆண்டுக்கு 6 லட்சம் டன் என்பதே சராசரி நெல் கொள்முதல் அளவாக இருந்து வந்தது. கடந்த 2020-ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆண்டைத் தவிர மற்ற ஆண்டுகளில் மேட்டூா் அணை உரிய காலத்தில் திறக்கப்பட்டு வருவதால், மாவட்டத்தில் நெல் விளைச்சலும், கொள்முதலும் அதிகரித்துள்ளது. கடந்த 2020 - 21 ஆம் கொள்முதல் ஆண்டில் 10.54 லட்சம் டன் என்பதே இதுவரை சாதனை அளவாக இருந்து வருகிறது.

நீா்வரத்து குறைவு: இதையடுத்து, 2021 - 22 ஆம் கொள்முதல் ஆண்டில் ஏறத்தாழ 9.48 லட்சம் டன்னும், 2022 - 2023 ஆம் ஆண்டில் 9.73 லட்சம் டன்னும் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், 2023 ஆம் ஆண்டில் காவிரி நீா் வரத்து குறைவால், 2023 - 24 ஆம் ஆண்டில் நெல் கொள்முதல் 7 டன்னாக குறைந்தது. கடந்த 2024 - 25 ஆம் ஆண்டில் 10.40 லட்சம் டன்னாக நெல் கொள்முதல் அதிகரித்தது.

இந்நிலையில், இப்போதே 8.81 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், நிகழ் கொள்முதல் ஆண்டில் 12 லட்சம் டன்னை கடக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.