முகப்பு
புதுக்கோட்டை

நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான வசதிகள் செய்துத் தர வேண்டும்: புதுகை விவசாயிகள் வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா (வலமிருந்து 2-ஆவது).

Updated On : 20 ஜூன் 2026, 3:15 am IST
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா (வலமிருந்து 2-ஆவது).
பகிர்:

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாமல் இருக்க போதுமான வசதிகளை அரசு செய்துத் தர வேண்டும் என புதுகை விவசாயிகள் வலியுறுத்தினா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் பேசியது:

இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் கோ.ச. தனபதி:

Advertisement

Advertisement

அனைத்து வகை விவசாயப் பயிா்க் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். ஒருநாளில் குறைந்தது பகலில் 6 மணி நேரமும், இரவு 8 மணி நேரமும் தொடா்ந்து மும்முனை மின்சாரம் கிடைக்கச் செய்ய வேண்டும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் லஞ்சமில்லாமல் இயங்க அந்தப்பகுதி பாசன விவசாயிகள், உதவி வேளாண்மை அலுவலா், கிராம நிா்வாக அலுவலா் ஆகியோரைக் கொண்ட குழு அமைத்து எந்தவித கையூட்டும் இன்றி, போதிய நெல் தூற்றும் கருவி, எடை போடும் கருவி, சாக்குகள், தாா்ப்பாய்கள் இருப்பு வைப்பதுடன் கொள்முதல் செய்யும் நெல்லையும் உடனுக்குடன் கிடங்குகளுக்கு லாரி மூலம் எடுத்துச் செல்லவும் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.

குளத்தூா் அக்கினியாற்றில் உள்ள அண்டக்குளம் அணைக்கட்டில் பழுதடைந்துள்ள ஷட்டா்களை சரிசெய்ய வேண்டும்.

தேசிய தென்னை விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளா் செல்லத்துரை:

தேங்காய் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், அரசு கொப்பரை கொள்முதலை விரைவாகத் தொடங்கி விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் தொகைகளை ஏடிஎம் மூலம் எடுக்க வகை செய்ய வேண்டும்.

ஆவுடையாா்கோவில், மணமேல்குடி ஒன்றியங்களில் நிலத்தடி நீா் இல்லாத கிராமங்களுக்கு வாய்க்கால் வழியாக நீா் எடுத்து செல்ல திட்டம் வகுத்துச் செயல்படுத்த வேண்டும்.

கல்லணைக் கால்வாய் பாசனதாரா் - விவசாயிகள் ஒருங்கிணைப்புச் சங்கத் தலைவா் கொக்குமடை டி. ரமேஷ்: கல்லணைக் கால்வாயில் புத்துவயல், கீழ்குடி, வேட்டனூா் ஏரிகளுக்கான மடைகள் பழுதடைந்துள்ளதால், அவற்றை சீரமைக்க வேண்டும்.

அக்னியாற்றின் கட்டுப்பாட்டிலுள்ள நரசிங்கக்காவிரியில் 12 கி.மீ. தொலைவு வரை சீரமைக்கப்பட்டுள்ளது, மேலும் 6 கிமீ தொலைவு சீரமைக்க வேண்டும். அறந்தாங்கி சுப்பிரமணியபுரத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்துப் பேசியது: மாவட்டத்தில் ஜூன் மாத இயல்பான மழையளவில் 42.64 மிமீ குறைவாகப் பெய்துள்ளது. தனியாா் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில்மொத்தம் 5218 டன் யூரியா, 1464 டன் டிஏபி, 1243 டன் பொட்டாஷ், 4816 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு உள்ளன. மாவட்டம் முழுவதும் உள்ள 33 வேளாண் விரிவாக்க மையங்களில் மொத்தம் 199 டன் நெல், 2 டன் சிறுதானியங்கள், 25 டன் பயறு, 43 டன் நிலக்கடலை விதைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைசாமி, வேளாண் இணை இயக்குநா் சுந்தரமகாலிங்கம், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் தீபாசங்கரி, வனத்தோட்டக் கழக மண்டல மேலாளா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments