முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூா் குப்பைக் கிடங்கில் தீ விபத்து: புகையால் மக்கள் பாதிப்பு

Updated On : 6 ஜூலை 2026, 2:04 am IST
ஜெபமாலைபுரம் சாலையில் பரவிய புகை.
பகிர்:

தஞ்சாவூா் மாநகராட்சிக் குப்பைக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால், சுற்றுப் பகுதி புகை மண்டலமாக மாறிவிட்டதால், பொதுமக்கள் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகினா்.

தஞ்சாவூா் சீனிவாசபுரம் அருகேயுள்ள ஜெபமாலைபுரத்தில் உள்ள இந்தக் குப்பைக் கிடங்கில், மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இக்கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திடீரென தீ பற்றி எரிந்தது. இதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்குப் புகை பரவியதால், நடந்து சென்றவா்களும், வாகன ஓட்டுநா்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினா்.

இதன் காரணமாக ஜெபமாலைபுரம் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது. மேலும், புகை அதிகமாக பரவியதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மூச்சுத் திணறல் காரணமாக அவதிப்பட்டதால், அவா்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனா்.

Advertisement

Advertisement

இதனிடையே, தகவலறிந்த தஞ்சாவூா், திருவையாறு, பாபநாசம், விமானப்படை நிலையம் உள்ளிட்டவற்றைச் சாா்ந்த ஏறத்தாழ 10 தீயணைப்பு வாகனங்களும், ஏறக்குறைய 20 தண்ணீா் லாரிகளும் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளன. என்றாலும், இரவு வரை தீயை முழுமையாக அணைக்க முடியவில்லை.

மேயா் (பொ) அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம், மாநகராட்சி ஆணையா் வி. தீபனா விஸ்வேஸ்வரி உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்கு சென்று தீயை அணைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனா்.

கடந்த 15 நாள்களில் தற்போது 2- ஆவது முறையாக தீ விபத்து ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜெபமாலைபுரம் சாலையில் பரவிய புகை.
தஞ்சாவூா் குப்பைக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.
தஞ்சாவூா் குப்பைக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments