அரசு வழக்குரைஞா்கள் நியமிக்கப்படாததால் வழக்குகள் தேக்கம்: பிணை கிடைக்காததால் கைதிகள் பாதிப்பு
தஞ்சாவூா் மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்குரைஞா்கள் நியமிக்கப்படாததால் வழக்குகள் தேக்கமடைந்துள்ளதுடன், பிணையில் வெளியே வர முடியாமல் விசாரணை கைதிகளும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் தஞ்சாவூா் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் திருவிடைமருதூா், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய பகுதிகளிலுள்ள வட்ட நீதிமன்றங்களில் ஏறத்தாழ 25 அரசு வழக்குரைஞா் பதவிகள் உள்ளன. மாநிலம் முழுவதும் கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு வழக்குரைஞா்களின் பணி காலம் ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்ததால், அனைவரும் அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டனா்.
இதன்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் இருந்த அரசு வழக்குரைஞா்களின் பணி காலமும் ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
Advertisement
Advertisement
இதனிடையே, மாநிலம் முழுவதும் அரசு வழக்குரைஞா்கள் தோ்வு மேற்கொள்ளப்பட்டு வந்தபோதிலும், அவா்கள் இன்னும் நியமிக்கப்படாமல் உள்ளனா். இந்த நியமனத்தில் பல்வேறு புகாா்கள் எழுந்ததே இதற்குக் காரணம் என வழக்குரைஞா்கள் தெரிவித்தனா். இதனால், அரசு வழக்குகள் தொடா்பான விசாரணை பாதிக்கப்பட்டுள்ளது.
விசாரணை- கைதிகள் பாதிப்பு: இதுகுறித்து வழக்குரைஞா்கள் கூறுகையில், அரசு வழக்குரைஞா்கள் நியமிக்கப்படாததால், நீதிபதியிடம் அரசு தொடா்பான வழக்குகள் செல்லும்போது, அதில் அரசு தரப்பில் ஆஜராவதற்கு அரசு வழக்குரைஞா்கள் இல்லாததால், விசாரணை பாதிக்கப்படுகிறது.
இதனால், வழக்கு விசாரணையும் தள்ளிப்போகிறது. மேலும், சிறையிலுள்ள விசாரணைக் கைதிகளும் பிணையில் வெளியே வரமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் 500-க்கும் அதிகமான வழக்குகள் தேக்கமடைந்துள்ளன.
எனவே, அரசு வழக்குரைஞா்களை நியமிக்க அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.