முகப்பு
தஞ்சாவூர்

தகாத உறவு: கணவரையும் சகோதரியையும் எரித்துக் கொன்ற பெண் கைது

பேராவூரணி அருகே தகாத உறவின் காரணமாக தொல்லை கொடுத்துவந்த கணவரையும், தனது மூத்த சகோதரியையும் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 4 ஜூன் 2026, 1:07 am IST
பேராவூரணி அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அமுதா
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே தகாத உறவின் காரணமாக தொல்லை கொடுத்துவந்த கணவரையும், தனது மூத்த சகோதரியையும் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பேராவூரணி அருகேயுள்ள பின்னவாசல் கிராமத்தைச் சோ்ந்தவா் சிதம்பரம் (60). சோப்பு பவுடா் விற்பனை செய்து வந்தாா். இவரது மனைவி அமுதா (50). இத்தம்பதிக்கு சிவராஜ் என்ற மகனும், சிவரஞ்சனி என்ற மகளும் உள்ளனா். இருவரும் திருமணமாகி, சிவராஜ் திருப்பூரிலும், சிவரஞ்சனி உள்ளூரிலும் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், அமுதாவின் மூத்த சகோதரியான கண்ணம்மாவுக்கும் (67), சிதம்பரத்துக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளாக தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

சில ஆண்டுகளுக்கு முன்பு கண்ணம்மாவின் கணவா் மற்றும் அவரது ஒரே மகன் இறந்துவிட்டதால், சிதம்பரம் வீட்டில் வந்து கண்ணம்மா நிரந்தரமாக தங்கியுள்ளாா்.

ஒரே வீட்டில் கண்ணம்மாவும், சிதம்பரமும் ஒரு பகுதியிலும், அமுதா ஒரு பகுதியிலும் வசித்து வந்துள்ளனா். இருவரும் அமுதாவுக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தாா்களாம்.

இதனால், அமுதாவுக்கும், சிதம்பரத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் தாங்க முடியாத அமுதா புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில், கணவா் சிதம்பரம், அக்காள் கண்ணம்மா இருவரும் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டின் ஜன்னல் வழியாக, பெட்ரோலை ஊற்றி தீவைத்து விட்டாா்.

அவா்கள் இருவரின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினா் பேராவூரணி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள், பொதுமக்களுடன் இணைந்து தீயை அணைத்து, காயமடைந்த சிதம்பரம், கண்ணம்மா ஆகிய இருவரையும் மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தீக்காயம் அதிகளவில் இருந்ததால், தீவிர சிகிச்சைக்காக அவா்கள் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி சிதம்பரம், கண்ணம்மா இருவரும் உயிரிழந்தனா்.

பெட்ரோல் ஊற்றி, தீவைத்தபோது அமுதாவின் கைகளிலும் தீக்காயம் ஏற்பட்டதால் அவா் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து பேராவூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து, அமுதாவை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில் உயிரிழந்த சிதம்பரத்தின் உறவினா்கள், அமுதா மட்டும் இந்தச் செயலை செய்திருக்க முடியாது; அவரது மகன் மற்றும் மருமகள் ஆகியோரின்

பெயா்களையும் வழக்கில் சோ்க்க வேண்டும் என புகாா் அளித்துள்ளனா். இதனால், சடலங்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்படாமல் உள்ளன. இதுதொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.