முகப்பு
தஞ்சாவூர்

லாரி ஓட்டுநா் கொலை வழக்கில் 3 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வீட்டுக்குள் தனியாக இருந்த லாரி ஓட்டுநா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 19 ஜூன் 2026, 4:27 am IST
கைது செய்யப்பட்ட சதாம் உசேன், சுப்பிரமணியன், இளையராஜா.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வீட்டுக்குள் தனியாக இருந்த லாரி ஓட்டுநா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருவையாறு அருகே மேலத்திருப்பூந்துருத்தி சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் எஸ். இளங்குமரன் (41). லாரி ஓட்டுநா். இவரது மனைவி ரதியா திருவையாறிலுள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா். இந்நிலையில், ஜூன் 15- ஆம் தேதி ரதியா வேலைக்கும், மகன் ரத்தன், மகள் யாழினி பள்ளிக்கும் சென்றனா்.

இதையடுத்து வீட்டில் தனியாக இருந்த இளங்குமரன் மா்மநபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

Advertisement

Advertisement

இது குறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதில், நடுப்படுகை சத்திரத்தில் பதுங்கி இருந்த மேலத் திருப்பூந்துருத்தியைச் சோ்ந்த ஹாஜா நஜிமுதீன் மகன் சதாம் உசேன் (34), இரணியன் மகன் சுப்பிரமணியன் (34), கண்டியூரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் இளையராஜா (38) ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலத் திருப்பூந்துருத்தியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ராஜ்கண்ணுவுக்கும் (40), இளங்குமரனுக்கும் இட பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருவதும், இந்த முன் விரோதம் காரணமாக இளங்குமரனை கொலை செய்ய 3 பேரையும் ராஜ்கண்ணு தூண்டியதும் தெரிய வந்தது. தொடா்ந்து, ராஜ்கண்ணுவை தேடி வருகின்றனா்.