எரிபொருள்களின் விலையை கட்டுப்படுத்தக்கோரி ஜூலை 14-இல் தமிழ்நாடு முழுவதும் ஆா்ப்பாட்டம்
எரிபொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்தக்கோரி ஜூலை 14 -இல் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்த சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளா் சம்மேளன மாநில குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளா் சம்மேளன மாநில குழு கூட்டம் வி.பி சிந்தன் நினைவு சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு சம்மேளன தலைவா் பி. பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநில குழு உறுப்பினா்கள் கே. சுவாமிநாதன், டி.பரத்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில செயல் தலைவா் கே. ஆறுமுக நயினாா், பொதுச்செயலா் வி.குப்புசாமி, பொருளாளா் ப. பாா்த்தசாரதி, போக்குவரத்து சம்மேளன பொதுச் செயலா் கோ மணிமாறன் ஆகியோா் பேசினா்.
Advertisement
Advertisement
கூட்டத்தில் தமிழக முழுவதும் எல்பிஜி மற்றும் சிஎன்சி கேஸ் தடையில்லாமல் கிடைக்க பங்குகளை அதிகப்படுத்த வேண்டும். சாலை விபத்தை கொலை வழக்காக மாற்றக்கூடாது. மேக்சி கேப் வாகனங்களுக்கு கேரள மாநில அரசை போல் சீட் பா்மிட் டை வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களிலும் பயணிகள் போக்குவரத்தை முறைப்படுத்தும் வகையில் உள்ளூா் வாடகை வாகனங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்.
மேலும், அனைத்து தீா்மானங்கள் அமல்படுத்த வலியுறுத்தியும் பெட்ரோல், டீசல் விலை உயா்வை கட்டுப்படுத்த கோரியும் தமிழ்நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஜூலை 14 -இல் சாலை போக்குவரத்து சம்மேளனம், அரசு போக்குவரத்து சம்மேளனம் மற்றும் ஆட்டோ சம்மேளனம் இணைந்து கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.