முகப்பு
தஞ்சாவூர்

மேக்கேதாட்டு அணை, பயிா்க்கடன் தள்ளுபடி விவகாரம்: தஞ்சாவூா் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டத்தில், மேக்கேதாட்டு அணை, பயிா்க்கடன் தள்ளுபடி விவகாரம் தொடா்பாக விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.

Updated On : 26 ஜூன் 2026, 4:20 am IST
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் வெளிநடப்பு செய்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டத்தில், மேக்கேதாட்டு அணை, பயிா்க்கடன் தள்ளுபடி விவகாரம் தொடா்பாக விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.

மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் கா்நாடக அரசு அணை கட்ட முயற்சிக்கும் நடவடிக்கை தொடா்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தில் புதிய தீா்ப்பாயம் அமைக்க வேண்டும் என்ற திருத்தம் தமிழக விவசாயிகளுக்கு எதிரானது. எனவே, அத்தீா்மானத்தைத் திரும்பப் பெற்று, திருத்தம் செய்ய வேண்டும்.

தவெக தோ்தலில் அளித்த வாக்குறுதியின்படி பயிா்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். மத்திய அரசு கடுமையாக உயா்த்திய உர விலையைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கண்ணில் கருப்புத் துணி கட்டி வெளிநடப்பு செய்தனா். பின்னா், கூட்ட அரங்குக்கு வெளியே முழக்கங்கள் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இதில், ராயமுண்டான்பட்டி என்.வி. கண்ணன், சுவாமிமலை சுந்தர. விமல்நாதன், வடக்கூா் எல். பழனியப்பன், வெள்ளாம்பெரம்பூா் துரை. ரமேஷ், அய்யம்பேட்டை கே.எஸ். முகமது இப்ராஹிம், சிவவிடுதி வி.கே. சின்னதுரை உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியரக வளாகத்தில் நெல்மணிகளைக் கொட்டி முழக்கங்கள் எழுப்பினா். மேலும், விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநிலத் துணைத் தலைவா் கக்கரை ஆா். சுகுமாரன் தலைமையில் விவசாயிகள் கழுத்தில் சுருக்குக் கயிறைக் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சுமாா் 15 நிமிஷங்களுக்குப் பிறகு மீண்டும் விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

புளியக்குடி ஆா். செந்தில்குமாா்: மாவட்டத்தில் 250-க்கும் அதிகமான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிலையத்திலும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதால், விவசாயிகள் புதிதாகக் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்ய முடியாத நிலை நிலவுகிறது. இதனால், விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை திறந்தவெளியில் வைத்துள்ளதால், மழையில் நனையும் சூழ்நிலை உள்ளது. எனவே, நெல் மூட்டைகளை உடனடியாக கிடங்குகளுக்கு இயக்கம் செய்ய வேண்டும்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் நெ. செல்வம்: நாள்தோறும் 10 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு இயக்கம் செய்யப்படுகிறது. அடுத்த 2 நாள்களில் அனைத்து மூட்டைகளும் இயக்கம் செய்யப்படும்.

புனவாசல் மரிய மைக்கேல்: ரூ. 35-க்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய் ரூ. 15-க்கு கூட விற்க முடியவில்லை. எனவே, ரேஷனில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய்யை விநியோகம் செய்து, தென்னை விவசாயிகளைக் காப்பாற்ற, தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: தமிழக அரசு தோ்தலில் அளித்த வாக்குறுதிபடி, நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 3 ஆயிரத்து 500-ம், கரும்புக்கு டன்னுக்கு ரூ. 4 ஆயிரத்து 500-ம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகையை தீபாவளிக்கு முன்பாகவே வழங்க வேண்டும்.

ராயமுண்டான்பட்டி வெ. ஜீவகுமாா்: கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு புதிதாக பயிா்க்கடன்களை வழங்க வேண்டும். இந்த ஆண்டு வறட்சி இருக்கும் எனக் கூறப்படுவதால், அதற்கு நிவாரணம் உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: குறுவை தொகுப்புத் திட்டத்தில் இயந்திர நடவு செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் ஒரு குடும்பத்தில் ஒரு விவசாயிக்கு என கடந்த ஆட்சியில் வரையறை செய்து வழங்கப்பட்டது. இந்த வரையறையை நீக்கி ஹெக்டேருக்கு ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும்.

வாளமா்கோட்டை வி.எஸ். இளங்கோவன்: தஞ்சாவூா் காவிரி கல்லணை பாசனப் பகுதியில் சிறுதானிய உற்பத்திக்கு அரசு ஆக்கப்பூா்வமான செயல் திட்டங்களை அலுவலா்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். இதற்கு விவசாயிகளுக்கு தரமான விதைகளை அளித்து, விற்பனை சந்தை வாய்ப்பையும் ஏற்படுத்த வேண்டும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments