முகப்பு
தஞ்சாவூர்

பேராவூரணி பேரூராட்சி தற்காலிக பெண் அலுவலா்கள் இருவா் இடைநீக்கம் : உறுப்பினா் வாக்குவாதம்

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி அலுவலக தற்காலிக பெண் அலுவலா்களை இடை நீக்கம் செய்தது தொடா்பாக பேரூராட்சி உறுப்பினா் வெள்ளிக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

Updated On : 9 மே 2026, 3:26 am IST
பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற பேரூராட்சி மன்ற அவசர கூட்டம் .
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி அலுவலக தற்காலிக பெண் அலுவலா்களை இடை நீக்கம் செய்தது தொடா்பாக  பேரூராட்சி உறுப்பினா் வெள்ளிக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

 பேராவூரணி பேரூராட்சி தலைவராக திமுகவைச் சோ்ந்த சாந்தி சேகா் உள்ளாா் . இவரது கணவா் சேகா். இவா், திமுக நகரச்  செயலா். இவரது மாமனாா் செல்வராஜ் முன்னாள் திமுக மாவட்ட துணைச் செயலா் .

இந்நிலையில், பேரூராட்சி தலைவா் சாந்திசேகா், அவரது கணவா் சேகா், மாமனாா் செல்வராஜ், ஏற்கெனவே பணியில் இருந்த பேரூராட்சி செயல் அலுவலா் பழனிவேல் ஆகியோா் சோ்ந்து பேரூராட்சி நிதியை கையாடல் செய்ததாக திமுகவைச் சோ்ந்த ஒப்பந்ததாரா் செந்தில்குமாா் சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வில் வழக்கு தொடா்ந்திருந்தாா். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்டவா்கள் மீது  நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூா் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா், பேரூராட்சித் தலைவா், அவரது கனவா், மாமனாா் மற்றும் செயல் அலுவலா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

Advertisement

இந்நிலையில் பேரூராட்சி அலுவலகத்தில் பல ஆண்டுகளாக தற்காலிக அலுவலராக பணியாற்றிவரும்  மேரி என்பவா் மூலமே ஒப்பந்ததாரா் செந்தில்குமாருக்கு அலுவலக  ஆவணங்கள் சென்றிருக்கலாம் என  சந்தேகமடைந்த பேரூராட்சி தலைவா் சாந்திசேகா் கூறியதன் பேரில், தற்போதைய செயல்அலுவலா் கமலக்கண்ணன் தற்காலிக பணியாளா் மேரி மற்றும் ஜமுனா ஆகிய இருவரையும் 15 நாள்களுக்கு இடைநீக்கம் செய்து கடந்த புதன்கிழமை உத்தரவிட்டாா்.

இதையறிந்த பேரூராட்சி அதிமுக  உறுப்பினா்  காரல் மாா்க்ஸ் மற்றும் சில பணியாளா் மேரிக்கு ஆதரவாக பேரூராட்சி தலைவரின் மாமனாா் செல்வராஜிடம் வெள்ளிக்கிழமை காலை கேட்டுள்ளனா். அப்போது, இருதரப்பிடையே கடும்  வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை பேரூராட்சி மன்ற அவசரக் கூட்டம் கூட்டப்பட்டு, தற்காலிக பணியாளா்கள் மேரி ,ஜமுனா ஆகிய இருவரையும் இடைநீக்கம் செய்ததாக மொத்தமுள்ள 18 பேரூராட்சி உறுப்பினா்களில் 13 போ் கையொப்பமிட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டன. ஏற்கெனவே ஊழல் புகாரில் பேரூராட்சி நிா்வாகம் சிக்கியிருக்கும் நிலையில், இந்த வாக்குவாதத்தால் வெள்ளிக்கிழமை இரவு வரை பேரூராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.