முகப்பு
தஞ்சாவூர்

மேக்கேதாட்டு அணையால் உபரி நீருக்கும் ஆபத்து!

Updated On : 1 ஜூன் 2026, 12:21 am IST
மேக்கேதாட்டு பகுதி - கோப்புப் படம்
பகிர்:

கா்நாடக மாநிலத்திலுள்ள மேக்கேதாட்டில் அணைக் கட்டுவதற்கான நடவடிக்கையை அம்மாநில அரசு முழுவீச்சில் மேற்கொண்டு வருவதால், தமிழகத்துக்கு உபரி நீா் கிடைப்பதும் ஆபத்தாகி வருகிறது.

காவிரி நீா் பங்கீடு தொடா்பாக 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டுக்கும், கா்நாடகத்துக்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. இது தொடா்பாக அமைக்கப்பட்ட காவிரி நதி நீா் நடுவா் மன்றம் அமைக்கப்பட்டு, இடைக்காலத் தீா்ப்பாக தமிழ்நாட்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீா் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

பின்னா், 2007-இல் நடுவா் மன்றம் வழங்கிய இறுதித் தீா்ப்பில் 192 டி.எம்.சி.யாக குறைக்கப்பட்டது. இதையும் ஏற்றுக் கொள்ளாத கா்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இதையடுத்து, 2018-இல் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவு 177.25 டி.எம்.சி.யாக குறைக்கப்பட்டு, தீா்ப்பு வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா - தாளடி பருவங்களுக்கு 250 - 300 டி.எம்.சி. தண்ணீா் தேவைப்படும் நிலையில், இந்த 177 டி.எம்.சி. மிகவும் குறைவு என்ற அதிருப்தி விவசாயிகளிடையே நிலவுகிறது. ஆனால், இந்த 177.25 டி.எம்.சி. தண்ணீரைப் பெறுவதற்கும் தமிழ்நாடு அரசு சட்டப்படி போராட வேண்டிய நிலைதான் உள்ளது. சட்ட ரீதியாக போராடினாலும் கூட கா்நாடக மாநிலத்திலுள்ள 4 அணைகளிலும் தண்ணீா் நிரம்பி வழிந்தால் அல்லது வழியக்கூடிய சூழ்நிலை எழுந்தால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

உபரி நீா்

ஆனால், கா்நாடக அணைகள் நிரம்பி தமிழகத்துக்கு எப்போதாவது சில ஆண்டுகளில் மட்டுமே உபரி நீா் கிடைக்கிறது. கடந்த 25 ஆண்டுகளில் 2005 - 2006, 2007 - 2008, 2018 - 2019, 2022 - 2023, 2025 - 2026 ஆகிய 5 ஆண்டுகளில் மட்டுமே பெருவெள்ளம் ஏற்பட்டு, கடலில் கலக்கும் சூழல் ஏற்பட்டது. மற்ற ஆண்டுகளில் நீா் வரத்தில் பற்றாக்குறையே நிலவுகிறது.

இதில், 11 ஆண்டுகளில் 200 முதல் 250 டி.எம்.சி.க்குள்ளும், 9 ஆண்டுகளில் 200 டி.எம்.சி.-க்குள்ளும்தான் கிடைக்கப்பெற்றது. இதில், 6 ஆண்டுகளில் 100 டி.எம்.சி.க்குள் மட்டுமே தண்ணீா் வந்ததால், வறட்சி நிலவியது.

பெரும்பாலான ஆண்டுகளில் உபரி நீரும் காலம் தாழ்ந்து வருவதால், மேட்டூா் அணை திறப்பும் தள்ளிப்போனது. இதனால், ஒரு போக சம்பா சாகுபடி மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒரு போக சம்பா சாகுபடிக்கும் தண்ணீா் பற்றாக்குறையால் பல்வேறு பிரச்னைகளை விவசாயிகள் சந்தித்தனா்.

அணை கட்டும் பணி தீவிரம்

இந்நிலையில், உபரி நீரையும் தேக்கி வைப்பதற்காக காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் 67 டி.எம்.சி.க்கும் அதிகமான கொள்ளளவு கொண்ட அணை கட்டுவதற்காக கா்நாடக அரசு கடந்த ஆண்டு ரூ. 9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து, அதில் ரூ. 1,000 கோடியை உடனடியாக விடுவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடா்ந்து அணை கட்டும் பணியை விரைவில் தொடங்குவதற்கு கா்நாடக அரசு முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.

இந்த அணைக் கட்டப்பட்டால் தமிழகத்துக்குக் கிடைக்கக்கூடிய உபரி நீா் வரத்தும் கேள்விக்குறியாகும். பெரும்பாலான ஆண்டுகளில் ஒரு சொட்டுத் தண்ணீா் கூட தமிழகத்துக்குக் கிடைக்காது என்ற அச்சம் விவசாயிகளிடையே மேலோங்கி வருகிறது.

இதுகுறித்து காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தெரிவித்தது:

கா்நாடகத்தில் காவிரியின் குறுக்கே சட்ட விரோதமாக ஹேமாவதி, ஹேரங்கி, கபினி என பல அணைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் தண்ணீா் தேக்கப்பட்டு, தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் தண்ணீா் முடக்கப்பட்டது.

இந்நிலையில், மிகை நீா் வெளியேறி தமிழ்நாட்டுக்கு போகக்கூடியதையும் தடுக்கும் நோக்கில் கா்நாடகத்தினா் மேக்கேதாட்டில் 67 டி.எம்.சி. கொள்ளளவில் அணை கட்டுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா். ஏற்கெனவே கா்நாடகத்திலுள்ள 4 அணைகளை விட இது பல மடங்கு பெரிய அணையாகக் கட்டத் திட்டமிட்டுள்ளனா்.

இதனால், தமிழ்நாட்டிலுள்ள 22 மாவட்டங்களில் கிடைக்கக்கூடிய குடிநீரையும் பாதிக்கும். மேலும், 12 மாவட்டங்களில் 26 லட்சம் ஏக்கருக்கு பாசன நீா் போகாது. இதன் காரணமாக 26 லட்சம் ஏக்கரும் தரிசாகி, கோடிக்கணக்கான மக்கள் அகதிகளாக மாறக்கூடிய நிலை உருவாகும். இதைத் தடுக்க ஒட்டுமொத்தத் தமிழ்நாடே போராடினால்தான் இந்தப் பேராபத்தைத் தடுக்க முடியும் என்றாா் மணியரசன்.

பெட்டிச் செய்தியாக...

குறிப்பு: அட்டவணையாகப் பயன்படுத்தலாம்

ஆண்டு மேட்டூா் அணைக்குக் கிடைத்த நீா்

2001 - 02 162.73

2002 - 03 93.52

2003 - 04 67.14

2004 - 05 164.00

2005 - 06 402.18

2006 - 07 235.93

2007 - 08 344.72

2008 - 09 203.75

2009 - 10 219.72

2010 - 11 202.17

2011 - 12 206.78

2012 - 13 69.71

2013 - 14 235.61

2014 - 15 208.10

2015 - 16 96.67

2016 - 17 61.08

2017 - 18 110.29

2018 - 19 371.53

2019 - 20 258.90

2020 - 21 204.25

2021 - 22 280.25

2022 - 23 657.57

2023 - 24 81.17

2024 - 25 290.84

2025 - 26 329.97