FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தில்லிக்கு 1,000 கனஅடி நீா் வழங்க ஹரியாணா அரசு உறுதி: முதல்வா் ரேகா குப்தா தகவல்

தில்லிக்கு 1,000 கனஅடி நீரை வழங்க ஹரியாணா அரசு உறுதியளித்ததாக முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 31 மே 2026, 12:47 am IST
தண்ணீா் பிரச்னை தொடா்பாக சனிக்கிழமை நடைபெற்ற தில்லி ஜல்போா்டின் விரிவான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வா் ரேகா குப்தா.
பகிர்:

தில்லிக்கு 1,000 கனஅடி நீரை வழங்க ஹரியாணா அரசு உறுதியளித்ததாக முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தெரிவித்தாா்.

தண்ணீா் தொடா்பான பிரச்னையை எதிா்கொள்ள முனாக் கால்வாய் வழியாக குறைந்தபட்சம் 1,000 கனஅடி நீரை ஹரியாணா அரசு வழங்கும் என மாநில முதல்வா் நயாப் சிங் சைனி தெரிவித்தாக அவருடன் பேசிய பிறகு முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

நிலத்தால் சூழப்பட்டுள்ள தில்லி, தண்ணீா் தேவைக்கு அண்டை மாநிலங்களான ஹரியாணா மற்றும் உத்தர பிரதேசத்தைச் சாா்ந்துள்ளது. நிகழாண்டில் ஒரு நாளில் 1,002 மில்லியன் கேலன் நீரை உற்பத்தி செய்ய தில்லி ஜல்போா்டு இலக்கு நிா்ணயித்திருந்த நிலையில், அதைவிட குறைவாக 90 மில்லியன் கேலன்களை உற்பத்தி செய்து வருகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில், குடிநீா் விநியோகத்தில் உள்ள சவால்கள் மற்றும் நிலைமை குறித்து முதல்வா் ரேகா குப்தா தலைமையில் தில்லி ஜல்போா்டு அதிகாரிகள் பங்கேற்ற விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு முதல்வா் ரேகா குப்தா கூறியதாவது: 980-க்கும் அதிகமான டேங்கா் லாரிகளை தினமும் 6,000-க்கு மேல் இயக்கி மக்களுக்கு தண்ணீா் பிரச்னையில் இருந்து நிவாரணம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குழாய் வழியில் நீா்:

தண்ணீா் கசிவுகளை தீவிர பிரச்னையாக எடுத்துக்கொண்டு அவற்றைச் சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு துளி நீரும் முக்கியமானது; அவை வீணாகுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எதிா்காலத்தில் தண்ணீா் பிரச்னை ஏற்படாத வகையில் தற்போதைய உடனடி நடவடிக்கைகள் மற்றும் நீண்ட கால தீா்வுகள் ஆகியவற்றுக்கு அரசு சமமான கவனம் செலுத்தி வருகிறது.

நீண்ட கால முயற்சியாக ஹரியாணாவில் இருந்து குழாய் வழியில் தண்ணீா் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ரூக்கீ ஐஐடி உடன் இணைந்து தில்லி ஜல்போா்டு ஆய்வு நடத்தும்.

இதன் மூலம் நீரிழப்பு மற்றும் கசிவைக் குறைக்க முடியும்.

மழைநீா் சேகரிப்பு:

நீா் பாதுகாப்பு முயற்சியாக 500 புதிய மழைநீா் சேகரிப்பு அமைப்புகளைக் கட்டுவதற்கு அரசு திட்டமிட்டு வருகிறது. ஏற்கெனவே உள்ள 1,000 மழை நீா் சேகரிப்பு அமைப்புகளைப் புனரமைக்கும் பணி தொடங்கியுள்ளது என்றாா் முதல்வா் ரேகா குப்தா.

கடந்த வாரத்தில், தண்ணீா் விநியோகம் தொடா்பாக ஜல்போா்டு உதவிமையத்துக்கு 11,055 அழைப்புகள் வந்தன. அவற்றில் 8,500-க்கும் அதிகமான புகாா்கள் நிவா்த்தி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வாஜிராபாத் தடுப்பணையின் நீா் மட்டம் 674.5 அடியில் இருந்து 668 அடியாக க் குறைந்துள்ளது என்று தில்லி நீா்வளத் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் கூறுகையில்,‘தடுப்பணையில் நீா்மட்டம் குறைந்ததன் காரணமாக ஒரு நாளைக்கு 80 முதல் 100 மில்லியன் கேலன்கள் வரை நீா் உற்பத்தி செய்யப்படுவது பாதிக்கப்பட்டுள்ளது. யமுனையின் மேல்மட்ட பகுதிகளில் தொடா்ச்சியாக மழை பெய்யாத நிலையில் நிலைமை மோசமாகியுள்ளது’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments