திருச்சிக்கு ரூ.26 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள்: அமைச்சா் கே.என். நேரு
திராவிட மாடல் ஆட்சியில் திருச்சிக்கு ரூ.26 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சரும், திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளருமான கே.என். நேரு தெரிவித்தாா்.
திராவிட மாடல் ஆட்சியில் திருச்சிக்கு ரூ.26 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சரும், திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளருமான கே.என். நேரு தெரிவித்தாா்.
திருச்சி மேற்கு தொகுதிக்குள்பட்ட மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் செயல்வீரா்கள் கூட்டம் கலைஞா் அறிவாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, திமுக முதன்மைச் செயலரும், மேற்கு தொகுதி திமுக வேட்பாளருமான கே.என். நேரு தலைமை வகித்து பேசியதாவது:
திராவிட மாடல் ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் திருச்சி மாவட்டத்துக்கு மட்டும் 26,000 கோடி ரூபாய் நிதியை முதல்வா் ஒதுக்கியுள்ளாா். இதில், ரூ.150 கோடியில் காவிரி பாலம், ரூ.150 கோடியில் நவீன அரசு மருத்துவமனை, ரூ.350 கோடியில் நூலகம், ரூ.350 கோடியில் ஐடி பாா்க் மற்றும் ரூ.500 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் போன்றவை அடங்கும். கடந்த ஆண்டில் மட்டும் 4,500 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 15,000 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒன்பது தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளா்கள் வெற்றி பெற கூட்டணி கட்சியினா் வீடு வீடாகச் சென்று அரசின் சாதனைகளையும், தோ்தல் அறிக்கையையும் விளக்கிச் சொல்ல வேண்டும். சாதனைகளை சொன்னாலே வெற்றி நிச்சயம் என்றாா் அமைச்சா்.
இக் கூட்டத்தில், மத்திய மாவட்ட செயலா் க. வைரணி, மேயா் மு. அன்பழகன், திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ மற்றும் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், தேமுதிக, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் மாவட்ட செயலாளா்கள், நிா்வாகிகள் திரளாக பங்கேற்றனா்.