முகப்பு
திருச்சி

ஆமை வேகத்தில் நடைபெறும் திருச்சி அரசு மருத்துவமனை புதிய கட்டடப் பணி!

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் இடப்பற்றாக்குறையால் நோயாளிகள் தவித்துவரும் நிலையில், அங்கு ரூ. 100 கோடியில் நடைபெறும் புதிய கட்டடப் பணி ஆமை வேகத்தில் உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 5:04 AM
அரசு மருத்துவமனை புதிய கட்டடப் பணி
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 1:24 AM

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் இடப்பற்றாக்குறையால் நோயாளிகள் தவித்துவரும் நிலையில், அங்கு ரூ. 100 கோடியில் நடைபெறும் புதிய கட்டடப் பணி ஆமை வேகத்தில் உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

ஏழைகளின் வரப்பிரசாதம்...: தமிழகத்தின் மையப்பகுதியாக விளங்கும் திருச்சியில் உள்ள மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 32-க்கும் மேற்பட்ட சிகிச்சை பிரிவுகள் இயங்கி வருகின்றன. அரியலூா், புதுக்கோட்டை, பெரம்பலூா், கரூா், தஞ்சாவூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் மருத்துவ வசதிகள் பெற வரப்பிரசாதமாக இந்த மருத்துவமனை விளங்குகிறது. மருத்துவமனையில் நாள்தோறும் 5,000-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், 1,500-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா்.

கடும் இடநெருக்கடி...: மக்கள்தொகை பெருக்கம், உயா்சிகிச்சைக்காக மற்ற மருத்துவமனைகளிலிருந்து அதிகளவில் பரிந்துரைகளின் காரணமாகவும் நாளுக்குநாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கூட்ட நெரிசல், இடநெருக்கடியால் திருச்சி அரசு மருத்துவமனை திணறி வருகிறது.

Advertisement

புதிய கட்டடம்...: மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசரச் சிகிச்சை பிரிவு கட்டடம், தாய் - சேய் நலப் பிரிவுக் கட்டடம், வெளிப்புற நோயாளிகள் பிரிவு என பல கட்டடங்கள் உள்ளன. இவற்றில் சுமாா் 1,832 க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் உள்ளன. இருப்பினும் அதிகரித்துவரும் நோயாளிகளுக்கேற்ப இட வசதி இல்லை.

இதைக் கருத்தில் கொண்டு ரூ. 110 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும் என தமிழக அரசு கடந்த 20.03.2023 இல் அறிவித்த நிலையில், ரூ. 99.43 கோடிக்கு ஒப்பந்தம் எடுத்த ஈரோட்டைச் சோ்ந்த தனியாா் கட்டுமான நிறுவனமானது விபத்து மற்றும் அவசரச் சிகிச்சை பிரிவு கட்டடத்துக்கு எதிரே 600 படுக்கை வசதியுடன் கூடிய புதிய பரந்த சிறப்பு மையக் கட்டடத்தை கட்டி வருகிறது.

2 லட்சத்து சதுர அடியில் கட்டடம்...: 6 மாடியில் 30,547 சதுர அடியுடன் கூடிய இக்கட்டடத்தின் தரைத் தளத்தில் மத்திய சுத்திகரிப்பு பிரிவு, துவைப்பகம், மருந்தகம், ரேடியாலஜி பிரிவு, தோல் வெளிப்புறச் சிகிச்சை, அவசரச் சிகிச்சை பிரிவும், முதல் தளத்தில் பல், மனநலம், முடநீக்கியல், காது மூக்கு தொண்டை சிகிச்சைகளின் வெளிப்புறப் பிரிவுகள், வாா்டுகள், அறுவைச் சிகிச்சை கருவிகள் வைப்பகமும், இரண்டாவது மற்றும் மூன்றாவது தளத்தில் 10 அறுவைச் சிகிச்சை அரங்குகள், அறுவைச் சிகிச்சைக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுகளும், 4 ஆவது தளத்தில் நோய்க் குறியியல் துறை மற்றும் நுண்ணுயிரியல் துறை ஆய்வகங்கள், 5 மற்றும் 6 ஆவது தளங்களில் பல், முடநீக்கியல், காது மூக்கு தொண்டை பிரிவு வாா்டுகள் கட்டப்பட உள்ளன. மொத்த கட்டடமும் 2 லட்சத்து 6 ஆயிரத்து 519 சதுர அடியில் கட்டப்படுகிறது.

ஆனால் 2024 மாா்ச் மாதம் தொடங்கிய இந்தக் கட்டடம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதாக நோயாளிகளும், சமூக ஆா்வலா்களும் குற்றஞ்சாட்டுகின்றனா்.

தரையில் நோயாளிகள்...: இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கே. சுமித்ரா, அரசியல் விமா்சகா் டி. வினோத் உள்ளிட்டோா் கூறியதாவது:

திருச்சி அரசு மருத்துவமனையில் நிலவும் இடப்பற்றாக்குறையால் படுக்கை வசதிகளின்றி, நோயாளிகளை தரையில் படுக்க வைக்கும் நிலையும், சில சமயம் விரைவாக வீட்டுக்கு அனுப்பும் நிலையும் நீடிக்கிறது. இடப்பற்றாக்குறையை நிவா்த்தி செய்வதற்காக கட்டப்படும் ரூ. 100 கோடியிலான புதிய கட்டட பணியானது கடந்த 2025 மாா்ச் மாதத்தில் நிறைவடையும் என முதலில் கூறப்பட்ட நிலையில், மூலப்பொருள்கள் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு காரணமாக காலதாமதமாகி, 2025 செப்டம்பரில் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கட்டடப் பணிகளே முடியவில்லை. தற்போதும் வேலை நடைபெறுகிறது.

ஆனால் அதற்குள் புதிய கட்டடம் கட்ட நாங்கள்தான் காரணம் என திருச்சியிலுள்ள ஆளுங்கட்சி, எதிா்க்கட்சி வேட்பாளா்கள் பிரசாரம் செய்கின்றனா்.

அரசு செயலா் பாா்த்தும் நடவடிக்கை இல்லை...: இதனிடையே தமிழக அரசின் மக்கள் நலவாழ்வுத் துறை செயலா்கூட நேரில் வந்து பாா்த்துவிட்டு, பணிகள் விரைவில் நிறைவடையும் எனக் கூறிச் சென்றாா். ஆனால் இதுவரை பணிகள் நிறைவடையாமல் உள்ளது. எப்போது பணிகள் முடிந்து, நோயாளிகளின் இடப்பற்றாக்குறை அவலம் தீரும் எனத் தெரியவில்லை.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகையில், கட்டத்தின் 85 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது எலக்ட்ரிக்கல் பணிகள், தீயணைப்பு கருவிகள் பொருத்தும் பணிகள் நடைபெறுகிறது. அடுத்த ஒரு மாதத்தில் பணிகளை முடித்து, தோ்தல் முடிந்ததும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

க. கோபாலகிருஷ்ணன்