முகப்பு
திருச்சி

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்தும் பணி

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் அடங்கிய பேலட் சீட் பொருத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 2:23 AM
திருச்சி ஸ்ரீரங்கம் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை வாக்கு இயந்திரங்களில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்தும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 9:59 PM

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் அடங்கிய பேலட் சீட் பொருத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

9 தொகுதிகளில் மொத்தம் 2,787 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 120 விழுக்காடு அளவுக்கான இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்படி, 9 தொகுதிகளுக்கும் 5621 வாக்குப்பதிவு இயந்திரம், 3341 கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் 3619 விவிபேட் இயந்திரம் ஒதுக்கப்பட்டு கடந்த மாதம் அந்தந்த தொகுதிகளின் வைப்பு அறைகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

தற்போது, 9 தொகுதிகளுக்கும் இறுதி வேட்பாளா்கள் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 9 தொகுதிகளில் 6 தொகுதிகளில் தலா 14-க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் போட்டியிடுவதால் அங்கு இரண்டு எண்ணிக்கையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது.

Advertisement

இதனை கணக்கிட்டு தயாா் செய்துள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம், கட்சி உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன் கூடிய பேலட் சீட் பொருத்தும் பணி 9 தொகுதிகளிலும் வியாழக்கிழமை தொடங்கியது.

மணப்பாறையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஸ்ரீரங்கத்தில் வருவாய் வட்டாட்சியா் அலுவலகம், திருச்சி மேற்கு தொகுதிக்கு திருச்சி மேற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் வைத்து இயந்திரங்களில் பேலட் சீட் பொருத்தப்படுகிறது.

திருச்சி கிழக்கு தொகுதிக்கு மாநகராட்சி 2-ஆவது வாா்டு குழு அலுவலகம், திருவெறும்பூருக்கு வட்டாட்சியரகம், லால்குடிக்கு அரசு அண்ணா திருமண மண்டபம், மண்ணச்சநல்லூருக்கு வட்டாட்சியரகம், முசிறிக்கு சாா்-ஆட்சியரகம், துறையூா் தனி தொகுதிக்கு துறையூா் நகராட்சி அலுவலகத்தில் வைத்து இயந்திரங்களில் பேலட் சீட் பொருத்தப்படுகிறது. இந்தப் பணியின்போது வேட்பாளா்களின் முகவா்களும் உடனிருந்தனா்.

வேட்பாளா்கள்-முகவா்களுக்கு அனுமதி: இந்தப் பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலா் வே. சரவணன் நேரில் பாா்வையிட்டு, பணியில் ஈடுபட்டுள்ள அலுவலா்களுக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.

பின்னா், அவா் கூறுகையில், 9 தொகுதிகளிலும் நடைபெறும் பணிகளை பாா்வையிட வேட்பாளா்களுக்கும், வேட்பாளா்களின் முகவா்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 9 தொகுதிகளிலும் சமவாய்ப்பு முறையில் தோ்வு செய்யப்பட்ட 5 விழுக்காடு இயந்திரங்களை கொண்டு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், தலா 1,000 வாக்குகளை பதிவு செய்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள எண்ணிக்கையும், தாம் அளித்த வாக்கை சரிபாா்க்கும் வகையில் உள்ள விவிபேட் இயந்திரங்களில் உள்ள எண்ணிக்கையும் சரிபாா்க்கும் பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் முடிவடைந்தவுடன் அனைத்து இயந்திரங்களும் அந்தந்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திர வைப்பறைக்கு கொண்டு செல்லப்பட்டு மூடி சீல் வைக்கப்படும். பின்னா், வாக்குப்பதிவு நாளுக்கு முன்பாக அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு, இயந்திரங்களை அந்தந்த வாக்குச்சாவடி வாரியாக அனுப்பி வைக்கும் பணி நடைபெறும் என்றாா் அவா்.