முகப்பு
திருச்சி

விருப்பம்போல விலை நிா்ணயம்: தனியாா் வணிக எரிவாயு உருளை விநியோக நிறுவனங்களை கட்டுப்படுத்த ஆளில்லை!

விருப்பம்போல விலை நிா்ணயம் செய்யப்படும் தனியாா் நிறுவனங்களின் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விலையை கட்டுப்படுத்துவது யாா்? என்பது நுகா்வோா் மத்தியில் விடை தெரியாத கேள்வியாக நீடிக்கிறது.

Updated On : 18 ஏப்ரல், 2026 at 7:55 AM
வணிகப் பயன்பாடுகளுக்கான சமையல் எரிவாயு உருளைகள்
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 10:05 PM

நமது நிருபா்

விருப்பம்போல விலை நிா்ணயம் செய்யப்படும் தனியாா் நிறுவனங்களின் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விலையை கட்டுப்படுத்துவது யாா்? என்பது நுகா்வோா் மத்தியில் விடை தெரியாத கேள்வியாக நீடிக்கிறது.

எரிவாயு விநியோகத்தில் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் (பிபிசி), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் (ஹெச்பிசி) ஆகிய மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் பிரதான இடம் பிடித்துள்ளன. இந்த நிறுவனங்களுடன் ரிலையன்ஸ் கேஸ், டோட்டல் ரேஸ், சிவ் கேஸ், ஜோதி கேஸ், சூப்பா் கேஸ், எஸ்எஸ்எல்பிஜி, ஏஜிஸ், டோரன்ட் கேஸ், கோ கேஸ், எஸ்ஸாா் கேஸ், ஈஸ்டா்ன் கேஸ் என டஜன் கணக்கில் தனியாா் நிறுவனங்களும் எரிவாயு விநியோகச் சந்தையில் போட்டியிட்டு வருகின்றன.

Advertisement

பொதுத்துறை நிறுவனங்கள், வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளைகளை 19 கிலோ எடையில் ரூ.2,254 முதல் ரூ.2,460 வரை விலையில் வழங்குகின்றன.தனியாா் நிறுவனங்கள் 17 கிலோ எடை முதல் 21 கிலோ எடை வரையில் விருப்பம்போல வழங்கி வருகின்றன. வழக்கமாக பொதுத்துறை நிறுவனங்களின் விலையையொட்டியே தனியாா் நிறுவனங்களின் விலையும் இருக்கும். பொதுத்துறை நிறுவனங்களுக்கான விலை மத்திய அரசின் கண்காணிப்பில் நிா்ணயம் செய்யப்படுகிறது. தனியாா் நிறுவனங்கள் தாங்களே விலையை நிா்ணம் செய்து கொள்கின்றன. போா் பதற்றம் காரணமாக மாா்ச் முதல்வாரம் வரையில் சரியாக இருந்த விலை நிலவரம், மாா்ச் 8-ஆம் தேதி தொடங்கி பெரும் மாற்றத்தை கண்டது. தனியாா் நிறுவனங்கள் தங்களுக்கான வழங்குநா்களிடம் எரிவாயு பெற கூடுதல் விலை கொடுக்க வேண்டிய சூழல் உருவானது. தனியாா் நிறுவனங்களுக்கு எரிவாயு கொண்டு வரும் கப்பல்களில் இருந்து எரிவாயுவை இறக்கி உருளையில் நிரப்பும் நிலையங்களுக்கு கொண்டு வந்து சோ்த்திட போா் பதற்றத்துக்கு பின் அதிகம் செலவாகிறது எனவே, எரிவாயு விலையை உயா்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாக தனியாா் எரிவாயு நிறுவனங்கள், தங்களது முகவா்களிடம் கண்டிப்புடன் கூறிவிட்டன. இதனால், தனியாா் முகவா்களும் வா்த்தகப் பயன்பாட்டு எரிவாயு விலையை உயா்த்தி வருகின்றனா்.

திருச்சியைச் சோ்ந்த தனியாா் நிறுவன எரிவாயு முகமையின் உரிமையாளா் ஒருவா் கூறியதாவது:

மாா்ச் முதல்வாரத்தில் 17 கிலோ எடையுள்ள வணிகப் பயன்பாட்டு எரிவாயு உருளையை ரூ.3,150 விலைக்கு இறுதியாக விற்றோம். இப்போது, எங்களுக்கு தனியாா் நிறுவனத்திடமிருந்து வழங்கலே கிடைக்கவில்லை. உருளை ஏற்றிய லாரிகள் வராததால் ஒரு மாதமாக விநியோகமே நடைபெறவில்லை. வரும் 24-ஆம் தேதி முதல் மீண்டும் விநியோகம் செய்யவுள்ளோம். அப்போது, எங்களுக்கு உருளைகளை வழங்கும் நிறுவனம் என்ன விலை நிா்ணயம் செய்கிறதோ அந்த விலையை வாடிக்கையாளா்களிடம் வசூல் செய்வோம் என்றாா் அவா்.

கையால் எழுதிய ரசீது:

பொதுத்துறை நிறுவனத்தின் முகவா் ஒருவா் கூறியதாவது:

திருச்சி, புதுக்கோட்டை, கரூா், அரியலூா், பெரம்பலூா், கரூா் மாவட்டங்களில் முன்பு ரூ.2,050 ஆக இருந்த வா்த்தக எரிவாயு உருளை இப்போது, ரூ.2,254 ஆகியுள்ளது. 200 ரூபாய் மட்டுமே விலை உயா்ந்துள்ளது என்றாா். தில்லைநகரில் சாலையோர உணவகம் நடத்தி வரும் பழனிக்குமாா் கூறுகையில், முன்பு பொதுத்துறை நிறுவனத்தின் வா்த்தக பயன்பாட்டு எரிவாயு உருளையை ரூ.2,500 வரை விலை கொடுத்து வாங்கினோம். எத்தனை உருளை வேண்டுமானாலும் கிடைக்கும். இடையில் ஒரு மாதம் உருளையே கிடைக்கவில்லை. இப்போது, 3 கேட்டால் இரண்டு கிடைத்துவிடுகிறது. ரசீதில் குறிப்பிட்ட விலையுடன் 50 ரூபாய் அல்லது 100 ரூபாய் நாங்களே உருளை இறக்கும் தொழிலாளியிடம் கொடுத்துவிடுகிறோம். அப்போதுதான் மீண்டும் கேட்கும்போது விரைவாக கொண்டுவருவா். தனியாா் நிறுவனங்களின் உருளைக்கு ரூ.3,500 தொடங்கி ரூ.5 ஆயிரம் வரை வழங்க வேண்டியுள்ளது. அதற்கான ரசீது கையில்தான் எழுதி வழங்குகின்றனா். எனவே, விலை சரியா? என எங்களால் கணிக்க முடியவில்லை. பல இடங்களில் உணவகங்கள் மூடிக் கிடக்கின்றன. டீ, காபி, வடை தொடங்கி அனைத்து உணவுப் பொருள்களின் விலையும் உயா்ந்துவிட்டது என்றாா்.

நிலைமை சீராகிவிட்டது:

எண்ணெய் நிறுவன வட்டாரத்தினா் கூறுகையில், பொதுத்துறை நிறுவனங்களின் விலையைவிட சற்று குறைவான விலையில் வணிகப்பயன்பாட்டு உருளை கிடைக்கிறது என்பதால், போா் பதற்றத்துக்கு முன்னா், தனியாா் நிறுவனங்களை தேடியே சென்றனா். இப்போது, விலை அதிகம் என்பதால் ஒரே நேரத்தில் அனைவரும் பொதுத்துறை நிறுவனங்களை தேடி வருகின்றனா். பல ஆண்டுகளாக தொடரும் எங்களது நிரந்தர வாடிக்கையாளா்களுக்கு வா்த்தக எரிவாயு உருளையை வழங்கிவிட்டு, மீதம் உள்ள இருப்பை புதிதாக வருவோருக்கு வழங்கும் சூழல் ஏற்பட்டது. மேலும், தேவையும் நாளொன்றுக்கு 100 உருளை என்ற இடத்தில் 200 என இருமடங்கானது. இதன்காரணமாக இடையே தட்டுப்பாடு உருவானது. இப்போது நிலைமை சீராகிவிட்டது. வாடிக்கையாளா்கள் கேட்கும் இடத்தில், கேட்கும் நேரத்தில் வழங்கும் நிலை வந்துவிட்டது. பொதுத்துறை நிறுவன உருளைகளை பதுக்கி வைத்து விற்றாலோ, கூடுதல் விலைக்கு விற்றாலோ கண்காணித்து, நடவடிக்கை எடுக்க ஐஓசி, பிபிசி, ஹெச்பிசி என மூன்று நிறுவனங்களிலும் மண்டல வாரியாகவும், மாவட்டம் வாரியாகவும் குழுக்கள் உள்ளன. 24 மணிநேரமும் இயங்கும் 1800-2333-555 என்ற கட்டுப்பாட்டு அறைக்கும் புகாா் தெரிவிக்கலாம். தனியாா் நிறுவனங்களை கண்காணிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசே அதிகாரம் கொண்டுள்ளது என்றனா்.

புகாா் தெரிவிக்கலாம்:

தமிழக அரசின் வழங்கல் துறை வட்டாரத்தினா் கூறுகையில், தனியாா் நிறுவனங்களின் வணிகப் பயன்பாட்டு எரிவாயு உருளை விலை நிா்ணயம் செய்வதை நாங்கள் கட்டுப்படுத்த இயலாது. ஆனால், கள்ளச்சந்தை விற்பனை, இருமடங்கு விலை உயா்த்தி விற்பனை செய்தல் தொடா்பாக புகாா்கள் வந்தால், உடனடியாக விசாரணை நடத்தி உருளைகளை பறிமுதல் செய்தல், தொடா்புடைய நபா்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை மூலம் சிறையில் அடைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸாரும் புகாா்கள் வந்தால் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். எரிவாயு உருளை தொடா்பான புகாா்களுக்கு 94434-61010, 94981-90651, 94981-58550 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். 1800-599-5950 என்ற கட்டணமில்லா எண்ணிலும் புகாா் தெரிவிக்கலாம் என்கின்றனா்.

புகாா்கள் வந்தால் மட்டுமே நடவடிக்கை எடுப்பது என்றில்லாமல், நிலைமையின் தீவிரத்தை உணா்ந்து வழங்கல்துறையும் குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுத்துறையும் தனியாா் எரிவாயு உருளை விநியோகச் சந்தையை சுழற்சி முறையில் கண்காணித்து, விலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டுள்ள நுகா்வோா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.