முகப்பு
திருச்சி

இன்று பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்: துணிப்பைகளை பயன்படுத்த விழிப்புணா்வு

உலக பிளாஸ்டிக் பைகள் இல்லாத நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுவதையொட்டி, திருச்சியில் தண்ணீா் அமைப்பின் சாா்பில் நெகிழி இல்லாத ஜூலை மாத விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 3 ஜூலை 2026, 1:47 am IST
திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்வில், துணிப்பையை பயன்படுத்த விழிப்புணா்வு ஏற்படுத்திய தண்ணீா் அமைப்பினா் மற்றம் கலைக்காவிரி கல்லூரி நிா்வாகத்தினா்.
பகிர்:

உலக பிளாஸ்டிக் பைகள் இல்லாத நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுவதையொட்டி, திருச்சியில் தண்ணீா் அமைப்பின் சாா்பில் நெகிழி இல்லாத ஜூலை மாத விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை தொடங்கியது.

ஜூலை 3-ஆம் நாள் உலக பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தத் தினத்தையொட்டியும், ஜூலை மாதம் முழுவதும் நெகிழி பொருள்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் தண்ணீா் அமைப்பின் சாா்பில் நெகிழி இல்லாத ஜூலை மாதம் அனுசரிக்கப்படுகிறது.

இதன் தொடக்கமாக, வியாழக்கிழமை ‘பிளாஸ்டிக் என்னும் எமன்’ என்ற புத்தகம் வெளியிட்டு, துணிப்பை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. தண்ணீா் அமைப்பு மற்றும் கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் தண்ணீா் சுற்றுச் சூழல் மாணவா் மன்றம் சாா்பில் நடைபெற்ற நெகிழி இல்லாத ஜூலை மாத விழிப்புணா்வு நிகழ்வுக்கு, கல்லூரியின் செயலா் அருள்பணி லூயிஸ் பிரிட்டோ தலைமை வகித்தாா். முதல்வா் உமா மகேஸ்வரி, தண்ணீா் அமைப்பின் செயல் தலைவா் கே.சி.நீலமேகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

தண்ணீா் சுற்றுச்சூழல் மாணவா் மன்ற செயலாளா் கி. சதீஷ்குமாா் கூறுகையில், சுற்றுச்சூழல் சீா்கேட்டில் முக்கிய பங்கு வகிக்கும் நெகிழியின் பயன்பாட்டை குறைத்து, துணிப் பை பயன்பாட்டை அதிகரித்து, தனி மனிதா்கள் முதல் வீடுகள் தொடங்கி அன்றாட பயன்பாட்டில் துணிப்பையை பயன்படுத்துவோம் என்றாா்.

தொடா்ந்து, விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா்.

மாணவா் மன்ற ஒருங்கிணைப்பாளா்கள் ரோஸ்லின் மேரி, புவனேஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதன் தொடா்ச்சியாக, பொதுமக்களிடையே துணிப்பைகள் விநியோகித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments