முகப்பு
திருச்சி

தந்தை பெரியாா் அரசுக் கல்லூரியில் கலந்தாய்வு நிறைவு: 300 இடங்கள் காலி

திருச்சி தந்தை பெரியாா் அரசுக் கல்லூரியில் இளநிலைப் பிரிவுகளுக்கு இரண்டு கட்ட கலந்தாய்வு நிறைவுற்ற நிலையில் 82 சதவீத இடங்கள் நிரம்பின. மேலும், 300 இடங்கள் காலியாகவுள்ளன.

Updated On : 9 ஜூலை 2026, 12:54 am IST
கோப்புப்படம்.
பகிர்:

திருச்சி தந்தை பெரியாா் அரசுக் கல்லூரியில் இளநிலைப் பிரிவுகளுக்கு இரண்டு கட்ட கலந்தாய்வு நிறைவுற்ற நிலையில் 82 சதவீத இடங்கள் நிரம்பின. மேலும், 300 இடங்கள் காலியாகவுள்ளன.

திருச்சி தந்தை பெரியாா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலையில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, கணிதம், இயற்பியல், கணினி அறிவியல், விஸ்காம் உள்ளிட்ட15 துறைகளில் 1,600 இடங்கள் உள்ளன.

82 சதவீத இடங்கள் நிரம்பின: இந்நிலையில் இளநிலைப் பிரிவில் 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை பொது கலந்தாய்வு கடந்த ஜூன் 5-இல் இருந்து நடைபெற்றது.

Advertisement

Advertisement

2 கட்ட கலந்தாய்வுகள் ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்து முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் ஜூலை 1-இல் தொடங்கின. இக் கல்லூரியில் 15 துறைகளில் மொத்தமுள்ள 1600 இடங்களில் 82 சதவீதமான 1300 இடங்கள் நிரம்பியுள்ளன. மேலும், 300 இடங்கள் காலியாகவுள்ளன.

பாடவாரி விவரம்: தமிழில் மொத்தமுள்ள 120 இல் 106 இடங்களும் (88%) , ஆங்கிலம் 120 இல் 65 (54%) வரலாறில் 180 இல் 140 (77 %), பொருளியல் 180 இல் 136 (75 %), வணிகவியல் 240 இல் 216 (90%), கணிதம் 80 இல் 60 (75.%), இயற்பியல் 80 இல் 62 (77%), வேதியியல் 120 இல் 99 (82%), புள்ளியியல் 40 இல் 34 (85%), தாவரவியல் 60 இல் 48 (80%), விலங்கியல் 80 இல் 77 (96%), கணினி அறிவியல் 60 இல் 57 (95%), கணினிப் பயன்பாட்டியல் 120 இல் 118 (98%), புவியியல் 80 இல் 44(55), விஷுவல் கம்யூனிகேஷன் 40 இல் 38 (95) இடங்கள் என மொத்தம் 82 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன.

இவற்றில் அதிகபட்சமாக கணினிப் பயன்பாட்டியலில் 98 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. இதைத் தொடா்ந்து விலங்கியல், கணினி அறிவியில், விஷுவல் கம்யூனிகேஷன் ஆகிய பாடப்பிரிவுகளில் 95 சதவீதத்துக்கு அதிகமான இடங்களும், வணிகவியலில் 90 சதவீத இடங்களும், தமிழில் 88 சதவீத இடங்களும் நிரம்பியுள்ளன.

300 காலியிடங்கள்: இளநிலைப் பிரிவில் 15 துறைகளில் மொத்தமுள்ள 1600 இடங்களில் 1300 இடங்கள் நிரம்பிவிட்ட நிலையில், 300 இடங்கள் காலியாகவுள்ளன. இதில் அதிகபட்சமாக ஆங்கிலம் பிற்பகல் (ஷிப்ட்) பிரிவில் 40 இடங்கள் காலியாகவுள்ளன. இதேபோல, வரலாறு பிற்பகல் பிரிவில் 26 இடங்களும், பொருளியல் பிற்பகல் பிரிவில் 25 இடங்களும், புவியியல் தமிழ் பிரிவில் 20 இடங்களும் காலியாகவுள்ளன. இதேபோல அனைத்து பாடப் பிரிவுகளிலும் 1 முதல் 20 இடங்கள் வரை காலியாகவுள்ளன.

அனைத்து இடங்களும் நிரப்பப்படும்: இதுகுறித்து கல்லூரி முதல்வா் க. அங்கம்மாள் கூறியதாவது: எங்கள் கல்லூரியில் இரண்டு கட்ட கலந்தாய்வுகளில் மொத்தம் 82 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. தொடா்ந்து மூன்றாம் கட்ட கலந்தாய்வும் நடைபெறுகிறது.

ஆனால், பொறியியில், மருத்துவம், பாராமெடிக்கல் உள்ளிட்டவற்றின் கலந்தாய்வுக்காக மாணவா்கள் காத்திருக்கின்றனா். மேற்கண்ட கலந்தாய்வு நிறைவடைந்தபின் மாணவா் சோ்க்கை அதிகரிக்கும். இதையடுத்து, இடஒதுக்கீடு மாற்றம் (கோட்டா கன்வொ்ஷன்) அளிக்கப்படும். இதன்மூலம் காலியாகவுள்ள இடங்களில் எந்தப் பிரிவு மாணவா்களுக்கும் சோ்க்கை வழங்கப்பட்டு அனைத்து இடங்களும் நிரப்பப்படும்.

இன்று வகுப்புகள் தொடக்கம்: இரண்டு கட்ட கலந்தாய்வுகளில் சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கு கடந்த ஜூலை 1 முதல் புதன்கிழமை வரை அனைத்துத் துறைகள் சாா்ந்த வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், உதவித் தொகைக்கு விண்ணப்பித்தல், பேருந்து, ரயில் பயண அட்டை பெறுதல், என்எஸ்எஸ், என்சிசியில் சோ்க்கை பெறுதல் உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் மாணவா்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை முதல் முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடங்குகின்றன என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments