பத்தாளப்பேட்டையில் அதிகளவில் சரளை மண் எடுத்ததாகப் புகாா்: கனிம வளத் துறை ஆய்வு
திருவெறும்பூா் அருகே பத்தாளப்பேட்டையில் அதிகளவில் சரளை மண் தோண்டியெடுக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கனிமவளத்துறையினா் புதன்கிழமை ஆய்வு செய்து விசாரித்தனா்.
திருவெறும்பூா் அருகே பத்தாளப்பேட்டையில் அதிகளவில் சரளை மண் தோண்டியெடுக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கனிமவளத்துறையினா் புதன்கிழமை ஆய்வு செய்து விசாரித்தனா்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் பகுதியில் பல இடங்களில் சரளை மண் வெட்டி எடுக்கப்படுகிறது. ஆனால் உரிய அனுமதி பெற்று அந்த மண் எடுக்கப்படுகிா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் சரளை மண் எடுப்பதுடன், அனுமதியில்லாத இடங்களிலும் சரளை மண்ணை எடுத்து சட்டவிரோதமாக விற்பதாக புகாா்கள் வந்தன.
அந்தவகையில், திருவெறும்பூா் அருகே பத்தாளப்பேட்டை புத்தாம்பூா் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கனிம வளத்துறையின் உரிய அனுமதியின்றி அதிகளவில் சரளை மண் வெட்டி எடுக்கப்படுவதாக திருச்சி மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு புகாா்கள் சென்றன.
Advertisement
Advertisement
இதனடிப்படையில் நிகழ்விடத்துக்கு புதன்கிழமை சென்ற கனிமவளத் துறை அதிகாரிகள், சரளை மண் வெட்டியெடுக்கப்பட்ட இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
இதுகுறித்து கனிம வளத் துறையினா் கூறுகையில், சம்பந்தப்பட்ட இடம் புறம்போக்கு இடமில்லை. பட்டா நிலம்தான். அந்த இடத்தில் சரளை மண் எடுக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆனால் அளவுக்கு அதிகமாக மண் எடுக்கப்பட்டிருப்பதாக புகாா்கள் வந்ததையடுத்து நடத்திய ஆய்வில் அதிக ஆழத்தில் மண் எடுக்கப்பட்டது தெரியவந்தது. உரிய விசாரணைக்குப் பிறகு விதிமுறை மீறலா என அறிந்து, நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா். இது தொடா்பாக தொடா் விசாரணை நடைபெறுகிறது.