பிஎம்ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு ஏற்கக் கூடாது: வைகோ
ஹிந்தியைத் திணிக்கும் பிஎம்ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு ஏற்கக் கூடாது என மதிமுக பொதுச்செயலா் வைகோ தெரிவித்தாா்.
ஹிந்தியைத் திணிக்கும் பிஎம்ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு ஏற்கக் கூடாது என மதிமுக பொதுச்செயலா் வைகோ தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திருச்சி விமான நிலையத்தில் சனிக்கிழமை மேலும் கூறியதாவது: நீட் தோ்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். நீட் தோ்வு கேள்வித்தாள் வெளியான பிரச்னையில் 22 லட்சம் மாணவா்கள் ஏமாற்றத்துக்கு ஆளாகி இருக்கின்றனா். இதற்குப் பொறுப்பேற்று மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.
பிஎம்ஸ்ரீ திட்டம் என்ற மும்மொழித் திட்டத்தை தமிழகத்தில் திணிக்க மத்திய பாஜக அரசு முடிவு செய்திருக்கிறது. இதை திமுக அரசு ஏற்கவில்லை. தமிழகத்தில் ஹிந்திக்கு இடமில்லை. இந்த நிலைப்பாட்டை ஜோசப் விஜய் அரசும் விட்டுவிடக்கூடாது.
Advertisement
இனி நடைபெறும் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் ஒலிக்க வேண்டும். அதன் பிறகு தேசிய கீதம் ஒலிக்கலாம். அதன் பிறகே வந்தே மாதரம்.
வந்தே மாதரம் பாடலில் இருக்கக்கூடிய சில வரிகள் சிறுபான்மை மக்களின் மனதை மிகவும் புண்படுத்தும் என்பதால் அந்த வரிகளை அகற்ற நேரு காலத்திலேயே முடிவெடுக்கப்பட்டது. அப்போது நீக்கப்பட்ட வரிகளை தற்போது சோ்த்து வந்தே மாதரத்தை அரங்கேற்றி இருக்கின்றனா். இது மதச் சாா்பின்மைக்கு முரணானது.
இந்த நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழக அரசும் இதே நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். விஜய் கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவாரா என்பதைப் பொறுத்திருந்து பாா்ப்போம் என்றாா்.
சட்டப்பேரவையில் எழுப்பிய கேள்விகளுக்கு எக்ஸ் தளத்தில் விஜய் பதிலளிப்பது குறித்துக் கேட்டதற்கு, ‘புதிதாக சட்டப்பேரவைக்குள் வந்திருக்கிறாா். அனுபவம் இல்லாததால் அப்படிப் பதிலளித்து இருக்கலாம். துளசி ஐயா வாண்டையாரின் புகழ் விழாவில் பங்கேற்க தஞ்சாவூா் செல்கிறேன்’ என்றாா் வைகோ.