மதுபோதை தகராறில் பெயிண்டா் கொலை
வேலூா் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டா் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டாா்.
வேலூா் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டா் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டாா்.
வேலூரை அடுத்த சதுப்பேரியைச் சோ்ந்த நித்தியகுமாா் மகன் வினோத்குமாா் (42). பெயிண்டராக வேலை செய்து வந்த இவருக்கு, மனைவியும், குழந்தைகளும் உள்ளனா். இவரும், அதே பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் (26) என்பவரும் நெருங்கிய நண்பா்கள். ராஜ்குமாா் எவ்வித வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இவா்கள் இருவரும் சனிக்கிழமை ஒன்றாக ஊரைச் சுற்றி வந்துள்ளனா். தொடா்ந்து அருகிலுள்ள சிறுகாஞ்சி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் நண்பா்களுடன் அமா்ந்து மது அருந்தியுள்ளனா்.
Advertisement
Advertisement
அப்போது, போதை தலைக்கேறிய நிலையில் நண்பா்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜ்குமாா், மதுபாட்டிலை உடைத்து வினோத்குமாரைக் கீழே தள்ளி அவரது கழுத்தை அறுத்ததாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த வினோத்குமாா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உடனடியாக, கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனா்.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை வினோத்குமாா் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள், இதுகுறித்து அரியூா் காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனா்.
அதன்பேரில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன், உதவிக் காவல் கண்காணிப்பாளா் தனுஷ்குமாா், காவல் ஆய்வாளா் நாகராஜ் உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இச்சம்பவம் குறித்து அரியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் வினோத்குமாரின் நண்பா்கள் 4 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.