பிளஸ் 1 மாணவியைக் கடத்தித் திருமணம்: போக்ஸோவில் தொழிலாளி கைது
பொன்னை அருகே திருவிழாவில் ஏற்பட்ட பழக்கத்தில், பிளஸ் 1 மாணவியைக் கடத்தித் திருமணம் செய்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பொன்னை அருகே திருவிழாவில் ஏற்பட்ட பழக்கத்தில், பிளஸ் 1 மாணவியைக் கடத்தித் திருமணம் செய்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
வேலூா் மாவட்டம், பொன்னையை அடுத்த மேல்பாடி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமி, பெற்றோா் இல்லாத நிலையில் தனது தாய்மாமன் வீட்டில் தங்கி அங்குள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறாா். இந்த நிலையில், கடந்த மே மாதம் அந்த மாணவி திடீரென மாயமானாா். அவரை உறவினா்கள் பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து மேல்பாடி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினா்.
இதில், பொன்னையை அடுத்த கீரைசாத்து பகுதியைச் சோ்ந்த சென்ட்ரிங் தொழிலாளியான சதீஷ்குமாா் (34) என்பவா், மாணவியைக் கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டு, திருத்தணி அருகே உள்ள ஒரு கிராமத்தில் தனிக்குடித்தனம் நடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனா். இதில், மாணவியின் ஊரில் கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற திருவிழாவுக்கு சதீஷ்குமாா் சென்றபோது, அவருக்கும் மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
பின்னா், மாணவியுடன் தொடா்ந்து கைப்பேசியில் பேசி வந்த சதீஷ்குமாா், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவாா்த்தை கூறி, கடந்த மே மாதம் அவரை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. மீட்கப்பட்ட மாணவியை காட்பாடியில் உள்ள அரசு காப்பகத்தில் போலீஸாா் ஒப்படைத்தனா்.
சிறுமியைக் கடத்திய சதீஷ்குமாரை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்த போலீஸாா், அவரை வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா். கைது செய்யப்பட்ட சதீஷ்குமாா் ஏற்கெனவே வேறொரு பெண்ணுடன் திருமணமாகி, விவாகரத்து பெற்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.